இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது :தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.********
இசை வெளியீட்டு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ” சந்தோஷமான தருணம் இது. ரகு தாத்தா ஆடியோ லாஞ்ச் இல்ல .. ரகு தாத்தா இசை வெளியீட்டு விழா. இயக்குநர் சுமன் – அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார். அதன் பிறகு என்னை பார்ப்பார். அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..’காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..’ என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம். அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது. இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது. இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் ‘ரகு தாத்தா’. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அருகே வா..’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.
ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது. அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.
இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார். படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும். படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.