சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.228 கோடி நன்கொடையை முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா (எம்டெக், 1970) வழங்கியுள்ளார். அகில இந்திய அளவில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய இந்த நன்கொடை, சென்னை ஐஐடி பணிகளை மேலும் வலுப்படுத்தும். இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 6, 2024) நடைபெற்ற நிகழ்வில், டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக கல்வி நிறுவனத்தின் தொகுப்பு ஒன்றுக்கு ‘கிருஷ்ணா சிவுகுலா பிளாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னைஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமைச் செயல் அலுவலர் திரு கவிராஜ் நாயர், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா 1997-ல் ‘மெட்டல் இன்ஜெக்சன் மோல்டிங்’ (எம்ஐஎம்) எனப்படும் அதிநவீன பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் அப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பமாக இது இருந்தது.

சென்னை ஐஐடி கடந்த 2015-ம் ஆண்டில் அவருக்கு ‘மதிப்புமிகு முன்னாள் மாணவர் விருது’ வழங்கியதன் மூலம் அவரின் தொழில்முறை சிறப்பையும், சமூகத்தற்கு ஆற்றும் பங்களிப்புகளையும் அங்கீகரித்தது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “பல ஆண்டுகளுக்குப் பிறகும் எங்களின் முன்னாள் மாணவர் ஒருவர் தாம் படித்த கல்வி நிறுவனத்தை நினைவில் வைத்து செயலாற்றுவது, கல்வி மட்டுமே மனிதகுலத்திற்கு அளிக்கக் கூடிய ஒரே அழியாத செல்வம் என்பதை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றார். திரு கிருஷ்ணா சிவுகுலாவின் மிகப்பெரிய பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்கால சந்ததியினர் அறிவாற்றலைப் பெறுவதில் மிகுந்த பயனடைவார்கள் என்றார்.

இந்தோ-எம்ஐஎம் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா தாம் படித்த கல்வி நிறுவனத்தை ஆதரிப்பதற்கான உந்துதல்களை விளக்கிப் பேசுகையில், “சென்னை ஐஐடியில் எனது கல்வி மிகவும் மறக்க முடியாததாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட மிகப்பெரிய நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் இருக்கிறேன்” என்றார்.

இந்த நன்கொடையைக் கொண்டு சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், சென்னை ஐஐடியின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீர்ர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவின் தாராள உதவிக்கு நன்றி தெரிவித்துப் பேசிய சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, “டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா வெற்றிகரமான தொழில்நுட்பத் தொழிலதிபர் மட்டுமல்ல, தலைசிறந்த முன்னாள் மாணவருமாவார். அவருடைய பணிவும் பெருந்தன்மையும் வரவிருக்கும் காலங்களில் முன்னாள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியான பண்புகளாகும்” என்று குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலகம் இதற்கான பணிகளை மேற்கொண்டது.

சென்னை ஐஐடியின் இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமைச் செயல் அலுவலர் திரு. கவிராஜ் நாயகர், “சென்னை ஐஐடியின் மதிப்புமிகு முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா மிகப்பெரிய தாராளமான பங்களிப்பிற்காகவும், இக்கல்வி நிறுவனத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை ஐஐடி இதுவரை பெற்றுள்ள மிகப்பெரிய நன்கொடை எங்களின் திறன்களை கணிசமாக மேம்படுத்துவதுடன், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்லும். அவரின் பங்களிப்பு இக்கல்வி நிறுவனத்தை உயர்த்துவது மட்டுமின்றி, நமது முன்னாள் மாணவர் சமூகம் எந்த அளவுக்கு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கு ஓர் எழுச்சியூட்டும் உதாரணமாகத் திகழ்கிறது” என்றார்.