அசாதாரண சாதனைகளின் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தமிழர்களை, ‘தமிழன் விருதுகள்’ மூலம் புதிய தலைமுறை தொலைக்காட்சி கொண்டாடி வருகிறது. கலை, இலக்கியம், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் சமூகப் பணி ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் தமிழன் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த சாதனையாளருக்கும், அதே துறையில் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் இளைஞருக்கும் தமிழன் விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், எம்.எஸ். விசுவநாதன், நடிகை ராதிகா, கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், ராபின் சிங், இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, கே. சிவன், சதுரங்க வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, தடகள வீரர் மாரியப்பன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு இதுவரை தமிழன் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழன் விருதுகள் வெறும் கொண்டாட்டத்துக்கான தளம் மட்டும் அல்ல, வருங்கால தமிழ்ச் சமூகத்தைப் மாபெரும் கனவுகளைக் காணவும், தமிழர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மேன்மை அடையவும் ஓர் ஊக்க சக்தியாய் விளங்குகிறது. பல்வேறு பின்னணிகள், தொழில்கள் மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் மேடையாகவும் தமிழன் விருதுகள் அமைகிறது. திசைகாட்டும் தமிழகர்களை திசையெட்டும் கொண்டாடவிருக்கும் தமிழன் விருதுகள் 2024 விழா வரும் ஆகஸ்ட் 10, சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.