நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர் களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நேர்ந்த இடத்திலேயே பணிபுரிந்த பத்மநாபன், அருண்குமார், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், ராமநாதன், நாகராஜ் ஆகிய 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் துணை முதன்மைப் பொறியாளர் சிவகுமார், இளநிலை பொறியாளர்கள் இரவிச்சந்திரன், வைத்தியநாதன், ஜோதிராமலிங்கம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான செல்வராஜ், இளங்கோவன், ஆனந்த பத்மநாபன் ஆகிய 7 பேரும் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொழிலாளர்களில் மேலும் நான்கு பேர் மிகவும் கவலைக்கு இடமாக இருப்பதாகத் தெரிகிறது. ஜூன் 1 ஆம் தேதி என்.எல்.சி. நிறுவனத்தில் நடந்துள்ள இந்தக் கோர விபத்தில் இதுவரையில் 13 தொழி லாளர்கள் உயிர் இழந்து உள்ளதும், மேலும் சிலர் உயிருக்குப் போராடி வரும் தகவலும் மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொழிலக விபத்தில் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.30 இலட்சம் கருணைத் தொகை அளிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக் கொண்டது.
ஆனால் இந்தக் கருணைத் தொகை ரூ.30 இலட்சத்தில் தொழிலக விபத்து நேரிட்டால் வழங்கப்பட்டு வரும் இழப்பீடுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவையும் தமிழக அரசு அறிவித்த 3 இலட்சம் ரூபாயும் அடங்கும் என்று என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்து இருப்பது ஏற்கவே முடியாத அக்கிரமம் ஆகும். இது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. என்.எல்.சி. நிர்வாகம் பாதுகாப்பு விதிகளை மீறியதாலும், பராமரிப்புப் பணிகளின் அலட்சியத்தாலும் தொடர் விபத்துகள் ஏற்பட்டபோதும் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அனல்மின் நிலையத்தை இயக்கியது தான் தொழிலாளர்கள் உயிர் பலியானதற்கு முதன்மைக் காரணம் ஆகும். தொழிலக விபத்தில் உயிரிழப்பவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டு த் தொகை என்பது சட்டபூர்வ உரிமையாகும். இந்நிலையில், உயிரிழந்தத் தொழி லாளர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ள ரூ.30 இலட்சம் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளிக்க வேண்டும். தொழிலக விபத்து இழப்பீட்டுத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை தனியாக அளிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை ரூ. 3 இலட்சத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். கோடி கோடியாய் அள்ளிக் கொடுத்தாலும், உயிர் இழப்புக்கு எதுவும் ஈடு செய்ய முடியாது என்பதை என்.எல்.சி. நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த தொழிலாளர்கள், பொறியாளர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனம் நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்கும்போது, கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.