மருத்துவமனைகளில் பாதுகாப்பை வழங்காத மம்தா பானர்ஜி அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  கண்டனம்

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை  மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவி ஒருவர்,  பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.  முதுநிலை மருத்துவ  மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறை இல்லாததும், கூட்ட அரங்கில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை இருந்ததும், பாதுகாப்பு வழங்கல்  இல்லாததுமே இந்த கொடுமையான நிகழ்விற்குக் காரணம். இதற்கு மேற்கு வங்க அரசும் ,கல்லூரி நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்.  இம்மாணவியை படுகொலை செய்த குற்றவாளிக்கு சட்ட ரீதியான கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்திட வேண்டும்.  இந்தக் கொடுமையான நிகழ்வு  மருத்துவ மாணாக்கர்கள்  பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.இது கவலை அளிக்கிறது. மருத்துவர்களின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதிப் படுத்திட வேண்டும்.  # மேற்கு வங்கம், தமிழ்நாடு   உட்பட இந்தியா முழுவதும் பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன.  அதனால் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை களில் மருத்துவ மாணவி களுக்கு பாதுகாப்பற்ற  நிலை உள்ளது. 

# இந்தியா முழுவதும், மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். 

#  கொல்கத்தா கோர நிகழ்வு போன்று   தமிழகத்தில் எந்த நிகழ்வும்  நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக எடுத்திட வேண்டும். 

# தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின்  வளாகங்களுக்குள் , அனுமதியின்றி யாரும், எப்பொழுதும், எங்கும்  செல்லலாம்  என்ற  தற்போதைய நிலை உடனடியாக  மாற்றப்பட வேண்டும். 

# தமிழகத்தில் உள்ள

பல மருத்துவக்  கல்லூரிகளில் , பாலியல் ரீதியான வன்முறை புகார்கள் வரும் பொழுதெல்லாம், கல்லூரி நிர்வாகங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன.  புகார்களை ஏற்பதில்லை.புகார்  அளிக்கக்கூடாது என மிரட்டுகின்றனர். புகார் அளிக்கும் பெண்ணுடைய எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற வகையில் பல காரணங்களைக் கூறி,  சமரசம் செய்வதும், கட்டப் பஞ்சாயத்து செய்வதும் தொடர்கிறது. 

# தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி முறையாக அமைக்கப்பட  வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் விசாகா கமிட்டி உறுப்பினர்களுடைய பெயர்கள் அடங்கிய ,பெரிய பெயர் பலகைகளை வைக்க வேண்டும். அதில் தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்களும் இடம் பெற வேண்டும்.

தற்பொழுது  அவ்வாறு பெயர் பலகைகள் இல்லை.  புகார்கள் வரும் பொழுது, விசாகா கமிட்டி  தலைவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்களைக் கூட பெற முடியவில்லை.கடும் முயற்சி எடுத்தே  கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது . இது மிகுந்த வருத்தத்தை தருகிறது. 

# “தமிழக அரசு  மருத்துவக் கல்லூரிகள் பாதுகாப்புக் குழு ” என்ற   அமைப்பை உருவாக்க வேண்டும். 

# மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்  பிற கல்லூரிகளைப் போல காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டும் செயல்படுவது  அல்ல. 24 மணி நேரமும்  , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆகவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற  மருத்துவ மாணவிகள், மாணவர்கள்,மருத்துவர்கள்பெண் ஊழியர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவ கல்லூரிகளிலும்  விடுதிகளிலும் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து செயல்பட வேண்டி உள்ளது.  ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆகவே மருத்துவ மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு   பாதுகாப்பான  சூழலை உறுதிப் படுத்த வேண்டும். 

# மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்குகின்ற  விடுதிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் உள்ளேயோ அல்லது அதற்கு மிக அருகிலேயோ அமைக்கப்பட வேண்டும். 

# மருத்துவக் கல்லூரி விடுதிகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு செல்லும் வழி பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

#  விடுதிகளில்  பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும். போதுமான அளவு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட வேண்டும்.போதிய பாதுகாவலர்களை நியமிக்க  வேண்டும். 

* மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வார்டுகள் , தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற இடங்களில் மருத்துவர்கள் , நோயாளிகளின் உறவினர்களால் எளிதில் தாக்கப்படும் ஆபத்து நிலவுகிறது. அத்தகைய தாக்குதல்கள் நிகலாமல் தடுப்பதற்கு, பாதுகாப்புக் கதவுகள், கேமராக்கள்  அமைப்பது,போதிய பாதுகாவர்களை நியமிப்பது உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். 

# மருத்துவக் கல்வி பயிலும் இளநிலை முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ மாணவிகள் மட்டுமின்றி அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பாதுகாப்பான பணி சூழல் அமைத்துக் கொடுத்திட வேண்டும் 

# மருத்துவமனைகளின்  பணியிடங்களில், பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். 

#  மருத்துவ மாணாக்கர்கள் , மருத்துவர்கள் எதிர் கொள்ளும் பல வகையான வன்முறைகள், அச்சுறுத்தல்கள், ராகிங் , கடும் பணிச் சுமை பிரச்சனைகள் அவர்களுக்கு உடல் ரீதியான , உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது .இதனால் ,சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப் படுகிறார்கள். எனவே “மருத்துவ மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான  நல வாரியம்” என்ற‌ அமைப்பை மாநில அளவில் உடனடியாக உருவாக்க வேண்டும்.  சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின், இந்த நீண்டகாலக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.