தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது அதன் வாயிலாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்கிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்கப்படவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஃபாஸ்ட் டாக் என்ற பெயரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெருமளவில் பொருளாதாரம் வாகன உரிமையாளர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூபாய் 28 கோடி வசூல் செய்தது என இந்தியத் தலைமை கணக்காயர் அறிக்கை அளித்ததும் கவனிக்கத்தக்கது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்எச்ஏஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகச் சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்க நேரிடும்..