“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்

(28.08.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களால், வண்டலூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வண்டலூர் வட்டம், ரத்தினமங்கலம் பெரிய ஏரி, சித்தேரியில் ஏரிகளை ஆழப்படுத்தி, தூர்வாரி பாதுகாத்திடவும், வேலி காத்தான் முட்கள் இருப்பதை அகற்றிடவும், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சித்தேரியில் மக்களின் பயன்பாட்டிற்கு அமரும் வகையில் பூங்கா மற்றும் நடைபாதை, மின்விளக்கு வசதி போன்றவற்றை அமைத்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய ஏரியினை தூர்வாரி மேம்படுத்துவதற்கு தடையின்மை சான்று பெற்று தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தூய்மைப்படுத்தி மேம்படுத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வண்டலூர் வட்டம் வில்லியம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக சேவை மைய சிறப்பு பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அவர்களின் படிப்புதிறன் பற்றி அறிந்து கொள்வதற்காக எண்களை சொல்லிக் காட்டுமாறு அறிவுறுத்தினார். மேலும் பள்ளி குழந்தைகளிடம் அவர்களின் கற்கும் திறன் பற்றியும் பிசியோதெரபி மூலம் வழங்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். தொடர்ந்து, மதிய உணவு தயாரிக்கப்பட்டுள்ள சமையலறை, பொருள்கள் வைப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி மதிய உணவினை வழங்கினார்.

மண்ணிவாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் நெகிழி மையத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் தாமரை தாங்கள் குளத்திலிருந்து தண்ணீர் மூலம் அங்கு பராமரிக்கப்படும் செடி கொடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு அதிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார். நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்து, இன்றைய உணவுவான கொழுக்கட்டை முட்டை, மதிய உணவு கலவை சாதம் குறித்து கேட்டறிந்து உண்டு பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார். மேலும் அங்கன்வாடி மையம் பழுதடைந்து காணப்படுவதால் அதனை நகராட்சி ஆணையாளரிடம் உடனடியாக புதுப்பித்தல் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் மையத்தில் உள்ள பொருள்கள் இருப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு விளையாடுவதற்கான இட வசதி போதுமானதாக இல்லை என்பதால் விளையாடுவதற்கான இடத்தினையும் ஏற்படுத்தித் தருமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்