திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம் திருச்சி) சென்னை வளாகத்தில், வணிக மேலாண்மை முதுகலைப் பாடத் திட்டத்தின் (பிஜிபிபிஎம்) 13-வது தொகுதி தொடக்க விழா நேற்று (2024 செப்டம்பர் 07) நடைபெற்றது. வார இறுதி, எம்பிஏ படிப்புத் திட்டமாக இது வழங்கப்படுகிறது. பணிபுரிபவர்கள் பயன் அடைய வேண்டும் என்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழில்துறை மேலாண்மைத் தலைமைத்துவ மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிதிப் பிரிவு இயக்குநர் திரு ரோஹித் குமார் அகர்வாலா பங்கேற்றார். திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங், பேராசிரியர் கோபால், பேராசிரியர் காட்வின் டென்னிசன், பேராசிரியர் கஜானந்த் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரோஹித் குமார் அகர்வாலா, தமது தொடக்க உரையில், உலகில் வணிக சவால்களை எதிர்கொள்ள திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலாண்மை மாணவர்கள் பல்வேறு வணிக களங்களை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
திருச்சி ஐஐஎம் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங் பேசுகையில் புதிய தொகுதி மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இணைந்து கற்றல், சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பாடத் திட்டத்தின் இலக்குகளுக்கு அப்பால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு முடிவுகள் எடுக்கும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது 2022-24, 2023-25-ம் ஆண்டுகளில் பிஜிபிபிஎம் பாடத் திட்டத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.