இரா.சரவணன் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் “நந்தன்”திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பொதுத்தொகுதியாக இருக்கும் ஒரு கிராமத்தில் பாலாஜி சக்திவேல் பல ஆண்டுகளாக நகராட்சித் தலைவராக இருக்கிறார். அந்த நகராட்சிக்கு தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் பட்டியிலினத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் தனித்தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்து விடுகிறது. அதனால் பாலாஜி சக்திவேல் தனது வீட்டில் அடிமை தொழில் செய்யும் சசிகுமாரை தேர்தலில் நிற்க வைத்து நகராட்சி தலைவராக்குகிறார். ஆனால் தலைவருக்குரிய பொறுப்புகளை பாலாஜி சக்திவேலே செய்கிறார். சசிகுமார் அவமானப்படுத்தப்பட்டு அடிபடுகிறார். இவற்றையெல்லாம் தாங்கி கொண்டு பதவியில் சசிகுமார் நீடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. இது இன்றும் தனித்தொகுதியில் வெற்றிபெற்ற தலைவர்கள் அவமானப்படுதப்படும் உண்மை சம்பவங்கள்தான். தலைவர் நாற்காலியில் அவர்களை அமரவிடுவதில்லை. தலைவர் தரையில்தான் உட்கார வைக்கப்படுகிறார். இந்த நிலை மாறவேண்டும் என்று இயக்குநர் சரவணவனன் தனது இதய வலியை திரையில் காண்பித்துள்ளார். அழுக்கு உடையிலும் அம்மனமாக்கப்படும் காட்சியிலும் சசிகுமார் மிளிர்கிறார். தனித்தொகுதி ஏன் உருவாக்கப்பட்டது என்பதை சமுத்திரக்கனி சொல்லும் அழகு அனைவரையும் கவர்கிறது. தன்னை அடித்து உதைக்கும் மேல்சாதி ஒருவரின் நெஞ்சில் எட்டி உதைக்கும் காட்சியில் ஸ்ருதி பெரியசாமி கைத்தட்டலை பெறுகிறார். மேல்சாதியினராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் வில்லத்தனதிற்கேற்ற நடிப்பை வெளிபடுத்தி பார்வையாளர்களின் கொந்தளிப்பை விருதாக பெறுகிறார். பட்டியிலின சசிகுமாரும் அவரை எதிர்த்து போட்டியிடும் பட்டியிலினத்தவரும் பேசிக்கொள்ளும்போது “நாமதான சண்ட போடனும், நமக்காக இவங்க ஏன் சணடபோடுறாங்க” என்ற வசனம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. “சபாஷ் இயக்குநரே”.