வடலூர் ஜே. சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் சார்பில், ஆர்.எஸ்.கார்த்திக், மனிஷா ஜித், மாரிமுத்து, சிவசங்கர், தவசி, உஷா எலிசபெத் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆரியமலா”. கடலூர் பகுதியில் உள்ள நடுநாடு என்ற கிராமத்தில் 1982 ஆம் ஆண்டு கூத்துக்கட்டுகிற இனத்திற்கும் ஒரு மேல்சாதி இனத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதை. நடுநாடு கிராமத்தில் மனிஷா ஜித் வயதாகியும் பருவமடையாமல் இருக்கிறாள். ஒருநாள் கனவு காண்கிறாள். அந்த கனவில் ஆர்.எஸ்.கார்த்திக்கை காதலிக்கிறாள். சிலநாட்கள் கழித்து அவ்வூர் திருவிழாவுக்கு கூத்துக்கட்டும் கலைஞனாக ஆர்.எஸ்.கார்த்திக் வருகிறார். கனவில் கண்ட காதலனை நிஜத்தில் பார்த்ததும் வியப்படைகிறாள் மினிஷா ஜித். நிஜத்தில் இவர்களின் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது. காத்தவராயன் வேடமிட்டு ஆடும் கார்த்திக் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்துள்ளார். தனது மனக்குமறலை அய்யனார் சிலை முன்பு சொல்லும் மனிஷா, பார்வையாளர்களின் மனதை தொடுகிறார். சகோதர பாசத்தையும் இன வெறியையும் தனது முகத்தில் தெறிக்கவிடுகிறார் மாரிமுத்து. மகளுக்காக அங்கலாய்ப்பதில் உச்சத்தை தொட்டிருக்கிறார் உஷா எலிசபெத். கிராமத்தின் அழகை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிற ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம் பாராட்டுகுறியவர். நடன இயக்குநர் சிவசங்கரின் நளினம் மிளிர்கிறது. மொத்தத்தில் இப்படம் “என்று ஒழியுமோ இந்த இனப்படு கொலைகள்” என்று பார்வையாளர்களை முணுமுணுக்க வைக்கிறது.