“ராக்கெட் ட்ரைவர்” திரைப்பட விமர்சனம்

அனிருத் வல்லப் தயாரிப்பில் ஶ்ரீராம் ஆனந்த சங்கர் இயக்கத்தில் விஷ்வத், சுனைனா, நாகா விஷால், காத்தாடி ராமமூர்த்த்தி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராகெட் ட்ரைவர்”. சென்னையில் ஆட்டோ ஓட்டும் விஷ்வத் அடிக்கடி கனவு காண்கிறார். ஒருநாள் அவரது கனவில் அப்துல் கலாம் தோன்றி 2015 ஆண்டு நாளேடை கொடுக்கிறார். அத்துடன் கனவு முடிகிறது. விஷ்வத் அப்துல்கலாமின் அதிதீவிர ரசிகராகிறார். ஒருநாள் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தொழ தொழ முழுக்கால் சட்டையும் கைச்சட்டையும் அணிந்து கொண்டு கையில் பழையகாலத்து ஒரு பெட்டியையும் வைத்துக் கொண்டு “மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு” போக வேண்டும் என்று ஆட்டோ ட்ரைவர் விஷ்வத்திடம் கேட்கிறான். அவரும் அச்சிறுவனை கூட்டிச் செல்கிறார். பல்கலைக் கழகத்தின் பதிவாளரிடம் “நான் ராமேஸ்வரத்தில் இருந்து வருகிறேன் எனது பெயர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்” என்று கூறுகிறான். இதைக்கேட்டதும் விஷ்வத் அதிர்ச்சியடைகிறார். அச்சிறுவனிடம் இது எத்தனாவது வருடம் என்று கேட்கிறார். “இது 1948 ஆம் ஆண்டு”  என்று அந்த சிறுவன் சொல்கிறான். அதாவது 1948 ஆம் வருடத்தின் அப்துல்கலாம் 2023 ஆம் ஆண்டில் வந்திருப்பதாக கதையை அமைத்திருக்கும் இயக்குநர் ஶ்ரீராம் ஆனந்த சங்கர்,  கடிவாளம் இல்லாத கற்பனை குதிரையில் சவாரி செய்திருக்கிறார். தற்போது சென்னை இருக்கும் சூழ்நிலை பிடிக்காத சிறுவன் அப்துல் கலாம் “என் அம்மாவை பார்க்க வேண்டும் என்னை என் அம்மாவிடம் அனுப்பி வையுங்கள்”. என்று விஷ்வத்திடம் அடம் பிடிக்கிறான். அச்சிறுவன் அப்துல் கலாமை எப்படி 1948 ஆம் வருடத்துக்கு அனுப்புகிறார் என்பதுதான் கதை. விஷ்வத கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். விஷ்வத்துக்கு தோழியாக வரும் சுனைனாவுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவ்ர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்துல் கலாமுக்கு அக்காலத்தில் நண்பராக இருந்து 2023 ல் வயோதிகராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி தனது நடிப்பின் முதிர்ச்சியை இலகுவாக காட்டியிருக்கிறார். சிறுவ்ன் அப்துல்கலாமாக நடித்திருக்கும் நாகா விஷால் பிரமாதமாக நடித்துள்ளார். அவரின் எளிமையான தோற்றமும் சிரிப்பும் அனைவரையும் கவர்கிறது. நேரம் போவதே தெரியாமல் பொழுது போக்கு படமாக தயாரித்துள்ளார்கள். அப்துல் கலாமின் நாணயத்தையும் நேர்மையையும் உச்சக்கட்ட காட்சியில் தெளிவுபடுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டுதலுக்குறியவர்.