கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “கண்ணெதிரே தோன்றினாள்” நெடுந்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், பவித்ரா” என்கிற புத்தம் புதிய மெகாத் தொடர் நவம்பர் 4 முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த மெகாத்தொடரின் முதல் அத்தியாயம் நவம்பர் 4-ந் தேதி இரண்டு மணி நேர படமாக இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.
தேவி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான, பிரபல தொழிலதிபர் ரமாதேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், கிருஷ்ணா சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணமுடித்து கொடுக்க ரமாதேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை பவானி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு விபத்தில் பாரதியும், பவானியும் ஒரு விபத்தில் இறந்ததாகவும், அவர்களுக்கு பவித்ரா என்கிற ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதையடுத்து பவித்ரா, ரமாதேவியின் அரவணைப்பில் வளர்கிறார்.
பவித்ராவின் வருகை ரமாதேவியின் சரிவை மீட்டெடுக்கிறது. எனினும், வீட்டில் உள்ளவர்கள் பவித்ராவை ஏற்க மறுக்கிறார்கள். இறுதியில், பவித்ராவை மொத்த குடும்பமும் ஏற்றுக்கொண்டதா மற்றும் பவித்ராவின் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யத்தோடு கதை விறுவிறுப்பாக நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.