ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை

போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ அமைப்பும், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமியும் இணைந்து சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள டான்பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. ‘பிரஹர்’ அமைப்பின் தலைவரும், தேசிய ஒருங்கிணைப்பாளருமான அபய் ராஜ் மிஸ்ரா, மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகடாமியின் இயக்குநர் டாக்டர்.வி.ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரஹர் அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் வி.மகேஷ்வரன் ஆகியோர், கருத்தரங்கு மூலம் அரசுக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.*******

ஐந்து கோரிக்கைகள் பின்வருமாறு:

1. போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்களை கண்டறியும் இந்திய நிறுவனங்கள் இன்னும் கூடுதல் பலம் வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும். குறிப்பாக திரைப்படங்கள் மூலம் இதுபோன்ற சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2. சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், அதில் இருந்து மக்களை பாதுகாப்பதுடன், அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் ’ரா’ போன்று மிக சக்திப் படைத்த அமைப்பாக சைபர் குற்றப் பிரிவுக்கான அமைப்பு இருக்க வேண்டும்.

3. கைப்பேசி அழைப்புகளில் வியாபார நோக்கம், ஸ்பேம் அழைப்பு, பாதிப்பில்லாத அழைப்பு ஆகியவற்றை தரம் பிரித்து அதற்கான வண்ணங்களை கொடுத்திருப்பது போல், போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை அரசாங்கமே கண்டறிந்து அவற்றுக்கான தர வண்ணங்களை கொடுக்க வேண்டும்.

4. போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் பயன்பாட்டுக்கு வரும்பொழுதே அதை அரசு தடுக்க வேண்டும். இது கருத்துக்கணிப்பு மூலம் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாகும், இதையும் நாங்கள் எங்கள் கோரிக்கையுடன் இணைத்துள்ளோம்.

5. ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், எவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்களிடம் திணிக்காமல், அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழுமையாக ஈடுபட வேண்டும்.