சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 06.11.2024 அன்று காலை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் M.மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மதியம் சுமார் 01.00 மணியளவில் சற்று தொலைவில் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் திடீரென தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, நெஞ்சை பிடித்தவாறு வாகனத்துடன் சாலையில் விழுந்தார். இதனைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் ஓடிச் சென்று அவரை தூக்கியபோது, மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார். உடனே, உதவி ஆய்வாளர் தனது காவலர்களுடன் சேர்ந்து மேற்படி நபரை தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ECG பரிசோதனை எடுக்கப்பட்டது. பின்னர் மேற்படி நபரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர் அறிவுறுத்தியதன்பேரில், உதவி ஆய்வாளர் மகேந்திரன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபர் முருகன், வ/32, கடலூர் மாவட்டம் என்பதும், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், வேலை காரணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது நெஞ்சுவலி ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல், துணை ஆணையாளர் (தெற்கு) பண்டி கங்காதர், இ.கா.ப., மேற்படி சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் M.மகேந்திரன், தலைமைக் காவலர் M.சுப்ரமணி (த.கா.36244), காவலர்கள் வேலாயுதம் (கா.52309) மற்றும் கங்காதரன் (கா.50645) ஆகியோரை (07.11.2024) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.