தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் (08 நவம்பர் 2024) திறந்து வைத்தார். தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டார். இதில் வேளாண் அறிவியல் மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அளவிலான வேளாண் வள மையத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கை ஏற்றிவைத்து வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து வேளாண் அறிவியல் மைய நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண் தொழில் முனைவோர்களால் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி அரங்கினை அமைச்சர் திறந்துவைத்தார். அப்போது உற்பத்தியாளர்களிடம் தொழில் மேம்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பெண் விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப கருத்தரங்கில் அவர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.