மாணவிகளுக்கு மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியரை கண்டித்து அறிக்கை

அக்டோபர் 22, 23 ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் ஐந்து மாணவிகள் மட்டும் தகுதி பெற்றனர். மீதமுள்ள மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். தகுதி பெற்ற மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமையில் தூத்துக்குடியில் ஒரு விடுதியில் அரை எடுத்து தங்க வைத்து, அடுத்த நாள் காலையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மாணவிகளுக்கு இரவு உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மாணவிகளுக்கு கூல்ட்ரிங்க்ஸில் மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். காலையில் எழுந்த மாணவிகள் தங்களது ஆடை களையப்பட்டு உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் காலையில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பின்னர் இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், மாணவிகளை அழைத்து இந்த சம்பவம் வெளியேயும், பெற்றோரிடமும் தெரியப்படுத்த வேண்டாம் என பள்ளியின் தாளாளர் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகளும் பள்ளிக்கு போகாமல் காரணங்களை சொன்னதும், பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாணவிகளிடம் என்ன நடந்தது என பெற்றோர்கள் கண்டிப்புடன் கேட்டதின் பெயரில், மாணவிகள் தங்களுக்கு நடந்த அக்கிரமங்களை தெரியப்படுத்தினர். மாணவிகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதன் பிறகு பள்ளியில் அந்த ஆசிரியரை தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்துள்ளோம் என அறிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார கல்வி அதிகாரியும், மாவட்ட கல்வி அதிகாரியும், குழந்தைகள் நலன் துறையும், திருச்செந்தூர் டிஎஸ்பி அவர்களும், திருச்செந்தூர் தாசில்தார் அவர்களும், குலசேகரப்பட்டினம் காவல்துறை அதிகாரிகளும், உடன்குடி VAO அனைவரும் வந்து விசாரணை நடத்தி, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற சம்பவங்களை உடனே அரசு கவனத்தில் கொண்டு இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீதும், பள்ளியின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். “வேலியே பயிரை மேய்ந்தது போல” என்ற பழமொழிக்கேற்ப பாதுகாப்பு தர வேண்டிய ஆசிரியரே, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது கொடுஞ் செயலாகும். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைய வழங்கினால் தான், மேலும் இதுபோன்ற தவறுகள் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.