தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல் : இந்திய ஒன்றியம் தீர்வு காண்பது எப்போது? – வேல்முருகன்

தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டினார்கள் என்ற காரணத்தைச் சொல்லி, அம்மீனவர்களை கைது செய்வது, சுட்டுக் கொல்வது, படகுகளை சிறைப்பிடிப்பது இப்படியான மனிதத் தன்மையற்ற செயலில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கச்சத் தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆம் தேதி கைது செய்துள்ளனர். மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது அவர்களது வாழ்வுரிமையை பறித்து வருகிறது.
நடப்பாண்டில் மட்டும் 324 மீனவர்களைக் கைது செய்திருக்கிறது சிங்களக் கடற்படை. நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் உட்பட 44 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018 முதல் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு படகு கூட விடுவிக்கப்படவில்லை.  சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள் சிங்கள அரசால் நாட்டுடமையாக்கப்படுகின்றன. மீனவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத பெருந்தொகை சிங்கள நீதிமன்றங்களில் அபராதமாக விதிப்பதும், இந்த அபராத தொகை கட்ட தவறினால் சிறை தண்டனை விதிப்பதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு.  ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு, கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ஆண்ட காங்கிரஸ் அரசும், ஆளும் பாசக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில்,  இலங்கையில் கப்பல் கட்டுவது மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை அதானிக்குப் பெற்றுத் தருவதிலேயே குறியாக இருந்த ஒன்றிய அரசு, அதே 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

எனவே, எதிர் வரும் காலத்திலாவது, ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி,  தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் இருந்து வரும் மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உள்ளிட்ட மீன்பிடி கருவிகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, ஒன்றிய அரசுக்கு போதுமான அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.