“கங்குவா” திரைப்பட விமர்சனம்

-ஷாஜகான்-

கே.ஈ.ஞானவேல்ரஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கார்த்திக், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி நட்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம் குமார், பாப்பி டியோல், டிஷா படானி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கங்குவா”. சர்வதேச குற்றவாளிகளை போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம்  பிடித்து கொடுத்து கமிஷன் வாங்கும் வேலை பார்க்கிறார்கள் நாயகன் சூர்யாவும் நாயகி பாப்பி டியோலும். இவர்களுக்கு துணையாக யோகிபாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார்கள். ரஷ்யாவில் பதுங்கியிருக்கும் ஒரு குற்றவாளியை உயிருடன் பிடித்து தந்தால் ரூ.15 லட்சம் கமிஷன் தருவதாக கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல, அவனை பிடித்துத்தர சூர்யா உள்பட அனைவரும் ரஷ்யா செல்கிறார்கள். ரஷ்யாவில் அந்த குற்றவாளி ஒரு சிறுவனை பிடித்து வைத்திருக்கிறான். அந்த சிறுவன் சூர்யாவைப் பார்த்ததும் அச்சிறுவனுக்கு  சூர்யாவின் முன் ஜென்மத்தில், சூர்யா யார் என்று தெரிகிறது. சூர்யாவுக்கும் அச்சிறுவனைப் பார்த்ததும் இனம் புரியாத ஒரு பாச உணர்வு ஏற்படுகிறது. குற்றவாளியை கொன்றுவிட்டு அச்சிறுவனை கோவாவுக்கு கொண்டுவந்துவிடுகிறார் சூர்யா. அச்சிறுவனுக்கும் சூர்யாவுக்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் கதை. படம் ஓடி அரை மணி நேரத்தில் 2024 ஆம் ஆண்டிலிருந்து 1070 ஆம் ஆண்டிற்கு திரைக்கதை பின்நோக்கி செல்கிறது. நமக்கு தலைவலியும் அப்போதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. அதற்குக் காரணம் இ(ஓ)சையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தின் வாத்தியங்கள்தான். ஒரே இரைச்சல். போதாக்குறைக்கு ஆ.ஊ.ஆ.ஊ என்ற காட்டுச் சத்தம். காட்டுமிராண்டிகளாக தமிழ் பேசுகிறவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். காட்சிகள் முப்பட்டக பரிணாமத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால் நடிகர்கள் அனைவரும் சிறு பொம்மைகள் போல் காட்சித்தருகிறார்கள். தொழில்நுட்பத்தை பாராட்ட வேண்டும். சூர்யாவின் இரண்டரை வருட கடின உழைப்பை படத்தில் காணமுடிகிறது. காட்டுமிராண்டி வேடத்திலும் அரிதாரப்பூச்சிலும் சூர்யாவைத்தவிர மற்ற நடிகர்களை அடையாளம் காணமுடியவில்லை. ஐவகை நிலங்களில்  திரைக்கதை பயணிக்கிறது. 1070ல் நடக்கும் சண்டையையும் 2024 ல் நடக்கும் சண்டையையும் மாற்றி மாற்றி காண்பித்து முடிவு பாகம் 2ல் தொடரும் என்கிறார் இயக்குநர் சிறுத்தை சிவா. பாகம் இரண்டில் தலைவலி தீருமா? அல்லது நெஞ்சுவலி வருமா?.