“ஜீப்ரா” திரைப்பட விமர்சனம்

எஸ்.என்.ரெட்டி, பாலசுந்தரம், தினேஷ் சுந்தரம் ஆகியோரின் தயாரிப்பில் ஈஸ்வர் கர்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுரேஷ் மேனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜீப்ரா”. சத்யதேவ் வங்கியின் கணனிப்பிரிவில் வேலைபார்க்கும் நேர்மையான அதிகாரி. அவரது காதலி பிரியா பவானி சங்கர் அதே வங்கியில் காசாளராக பணிபுரிகிறார். ஒருவருக்கு அனுப்ப வேண்டிய ரூ4 லட்சத்தை மறதியாக வேரொரு நபருக்கு அனுப்பி விடுகிறார். பணம் வந்த நபரும் ரூ.4 லட்சத்தையும் எடுத்து விடுகிறார். பணத்தை பறிகொடுத்தவரின் கணக்கில் ரூ. 4 லட்சம் இருப்பதாகவே கணனியில் காட்டி, அந்தப் பணத்தையும் தனது புத்திசாலித்தனத்தால் மீட்டெடுத்து தனது காதலி பிரியா பவானி சங்கரை காப்பாற்றுகிறார் சத்யதேவ். இதற்கிடையில் சத்யதேவ்வுக்கு ரூ.5 கோடிக்கு வங்கியில் கடன் இருக்கிறது. இவருக்கு கடன் எப்படி வந்தது? அக்கடனை எப்படி சமாளித்தார் என்பதுதான் கதை. திரைக்கதையின் ஓட்டம் விறுவிறுப்பாகவும் நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி செல்கிறது. புறவாசல் வழியாக வங்கிக்கு வரும் வரவுகளை கட்சிதமாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். இயக்குநரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் சத்யதேவ். சத்யராஜின் அசால்ட்டான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. பிரியா பவானி சங்கர் பித்தலாட்டத்தின்  முகபாவனைகளை அழகாக காட்டி நடித்துள்ளார். சலிப்புத்தட்டாமல் தொடரும் பொழுதுபோக்குப் படம்.