ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

இயக்குநரும்,  நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, செல்வராகவன், நட்டி  நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள். இப்படம்  வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.*********

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் – ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா – அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி. இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் – இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘சிங்கப்பூர் சலூன்’ என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை  பிரார்த்திக்கிறேன். கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த  திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வராகவன்  திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது. மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.