மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படம் டிச.13ல் வெளியீடு

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13ல்  திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன்,  ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.********

இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் பேசுகையில், ”முண்டாசுப்பட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அந்தப் படத்திற்கு சி வி குமார் சார்தான் தயாரிப்பாளர். அதன் பிறகு ராட்சசன் படத்தின் திரைக்கதை எழுதினேன். மார்க் ஆண்டனி படத்திற்கு திரைக்கதையில் உதவி செய்தேன். 13 ஆண்டு காலம் நிறைவடைந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் சி வி குமார் சார் அழைப்பு விடுத்தார். சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதுங்கள் என கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இதை என் நண்பர்களிடம் சொன்னபோது அனைவரும் என்னை பயமுறுத்தினார்கள்.  ஆனால் நான் பயப்படவில்லை ஏனென்றால் அப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை. சும்மா இருப்பதை விட இந்த வேலையை செய்யலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  இந்தப் படத்தில் ‘வாய்ப்புல இருக்கிற பிரச்சினைய பார்க்காதே…அந்த பிரச்சனைக்குள்ள இருக்கிற வாய்ப்ப பாரு..’ என  டயலாக் வரும். அதனால் கதை எழுத தொடங்கினோம். சி வி குமாரின் தயாரிப்பு நிறுவனம் என்பது கடினமானது தான்.

பொதுவாக இரண்டு விதமான பெற்றோர்கள் உண்டு. தன்னுடைய பிள்ளை எந்த கஷ்டமும் படக்கூடாது என்பதற்காக எல்லா வசதிகளையும் செய்து தருவார்கள். அதனால் அந்த பிள்ளை என்ன கேட்டாலும் அதை வாங்கி கொடுத்து வளர்ப்பார்கள். இது ஒரு வகை. மற்றொரு வகையான பெற்றோர்களும் உண்டு அதாவது தான் படும் கஷ்டத்தை மகனுக்கு உணர்த்த வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் அவர்கள் படும் கஷ்டத்தை பையனுக்கு தெரியப்படுத்துவார்கள். பையனும் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து வளர்வான். இது போன்றது தான் சி.வி குமாரின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் சிவி குமாரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவானவர்கள் தயாரிப்பாளர்களின் வலியினை புரிந்து கொண்டவர்கள். சினிமாவின் யதார்த்தத்தை இங்குதான் உணர முடியும். கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்கள் இங்கிருந்து சென்று இன்று வெற்றிகரமான இயக்குநர்களாகவும், தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள் என்றால் இங்கு அவர்களுக்கு சி.வி குமார் கொடுத்த பயிற்சிதான் காரணம்.

சூது கவ்வும் 2 படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதைக்கு யார் பொருத்தமான ஹீரோவாக இருப்பார் என்று கேள்வி எழுந்தது. எந்த அளவுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய கதாபாத்திரம் அது. அதற்கு மிர்ச்சி சிவா தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தோம். அவர் படப்பிடிப்பு தளத்திலும் ஜாலியாகவே இருப்பார். இந்தப் படத்தில் குருநாத் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இதனை திரையரங்குகளில் காணும் ரசிகர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள்.

எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், வாகை சந்திரசேகர், கருணாகரன் என ஒவ்வொருவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

சூது கவ்வும் பாடத்தின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரம் தான். அதில் அருள்தாஸ் அற்புதமாக நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும்,” என்றார்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பாய்ஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. அதற்காக படத்தின் ஹீரோயின் இல்லை என்று நினைக்காதீர்கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற்பனையான கதாபாத்திரம். அதனால் இங்கும் ஹீரோயின் இருக்கிறார்கள் ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை.

சி வி குமார் சாரை அலுவலகத்தில் சந்தித்தபோது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. அதில் நான் நடிக்கிறேன் என்றாலும்… அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.

தயாரிப்பாளர் சி வி குமார் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பா. ரஞ்சித் – நலன் குமாரசாமி – கார்த்திக் சுப்பராஜ்-  போன்றவர்களை அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதி சிக்கல் குறித்து தயாரிப்பாளர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். நாம் இதுவரை என்டர் தி டிராகன் படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ரிட்டன் தி டிராகன் ஆக வருகை தந்திருக்கிறார்.

‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இந்த படத்திற்கு மற்றொரு தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங்கமான மனதுடையவர். இந்தப் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றி.