எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோடக் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் அறிமுக நிகழ்வில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது: “சூரி மாதிரியான பெரிய ஹீரோ அவரது படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். கென் கருணாஸூக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சேத்தன் சாரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு அவர். அவரைத் தவிர வேறு யாரையும் ரீபிளேஸ் செய்ய முடியாது.*******
ஜாக்கி சாரின் செட் காலத்தைக் கடந்து எங்களை கூட்டி சென்று அந்த காலத்தில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. பவானி, தமிழ் சார் அனைவருக்கும் வாழ்த்துகள். உணர்வுகளை இசையாக மாற்றுபவர் ராஜா சார். அவரின் இசை மூலம் எனக்கு பேரானந்தம் கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. அவரது பேச்சும் வாழ்க்கையில் பல புரிதல்களை எனக்குக் கொடுத்தது. இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இந்தப் படம் உருவாக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். ஒருநாள் கூட அவர் சோர்ந்து போய் நாங்கள் பார்த்ததே கிடையாது. தயாரிப்பாளர் எல்ரெட் சார் இந்தப் படத்தைக் கிரீடமாக சுமந்து கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் நன்றி”
தயாரிப்பாளர் எல்ரெட் குமார், “’விடுதலை’ பயணம் முடிவது கடினமாக உள்ளது. ஆனாலும், இந்தப் பயணத்திற்கு நன்றி. இந்தப் படத்தை முதலில் முடிவு செய்து வைத்திருந்தது வெற்றி சாரும் ராஜா சாரும் தான். அவர்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். படத்தில் பணிபுரிந்த வேல்ராஜ் சார், ஜாக்கி சார், பீட்டர் ஹெய்ன் சார் மற்றும் மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ராஜா சாருடன் அதிகம் உரையாடுவதற்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பொக்கிஷம். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. ’விடுதலை’ இரண்டு நடிகர்களை இன்னும் மேலே தூக்கி வைக்கும் என்று நம்புகிறேன். விஜய்சேதுபதி சாருக்கும் சூரி சாருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த தலைமுறையில் நான் நம்பும் நடிகர்களில் கென்னும் ஒருவர். பவானி ஸ்ரீ, சேத்தன் சார், ராஜீவ் மேனன் சார் எல்லோருக்கும் வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி”
இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை காலம் இந்த கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையில் பயணித்த குழுவினருக்கு மிக்க நன்றி. படத்தில் என்னுடைய அசிஸ்டெண்ட் அனைவரும் கோ-கிரியேட்டர்ஸாக உழைத்திருக்கின்றனர். இதுபோன்ற டீம் கிடைத்தது என் பாக்கியம். இதில் ராஜா சார் உள்ளே வந்தது எனக்கு அதிர்ஷ்டம். அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத்து நிமிடம் தாமதமாக அவரைப் பார்க்க சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திருப்பார். அவர் எனக்கு பர்சனலாகவும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயம். படத்தில் இயக்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இருந்து பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எட்டு நாள்தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி. சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். படத்தில் மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கால்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால், இப்போது அவருக்கு படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. என்னுடைய குடும்பம், நண்பர்கள், டீம் எல்லோருக்கும் நன்றி”