மதுரை, டிச. 8: மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரையில் வரும் புதன்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது. மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜி.ஆர். சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சுதந்திரப் போராட்ட வீரரும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதிக்கு “மகாகவி பாரதியார்’ விருதை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.
மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகிக்கிறார். தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறார். கவிஞர் ஜெயபாஸ்கரன் விருதாளர் அறிமுகவுரையாற்றுகிறார். வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா வாழ்த்துரையாற்றுகிறார். சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ். பார்த்தசாரதி நன்றி கூறுகிறார். எட்டயபுரத்தில்….: முன்னதாக, எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கு தினமணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. பிறகு, அங்கிருந்து பாரதி அன்பர்களுடன் மகாகவி பாரதியாரின் மணிமண்டபத்துக்கு ஊர்வலம் நடைபெறவுள்ளது. ஊர்வலத்தின் நிறைவில், தமிழறிஞர்கள், பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள் பாரதியாரின் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். இந்த மூன்று நிகழ்வுகளிலும் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழார்வலர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.-