விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வெளியீட்டு விழாவில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, “இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது. பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள்.*********
இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை. சில படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் சார் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார். என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.
இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா சார், கே.ராஜன் சார், இயக்குநர் மைக்கேல், பேரரசு சார் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்ட்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும். சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசுகையில், “நான் சினிமா துறைக்கு புதியவன். எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். 12ம் வகுப்பு படிக்கும் வரை மொத்தமாக நான்கு திரைப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கல்லூரி சென்ற போது தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. என் கேரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்றால் இரவு 12 மணி வரை பணியாற்றுவேன். இந்த படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்திலும் என் பங்களிப்பு இருக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சினிமா வேலையை பார்க்கிறேன். ஜனவரி 3 எப்போது வரும் என்று என் மனைவி எதிர்பார்க்கிறார், அப்போதாவது நான் பழையபடி இருப்பேன் என்பதால் தான்.
நீங்கள் நினைப்பது போல் சினிமா சாதாரணமான வேலை கிடையாது. கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள், 6 மணிக்கு வண்டி பிடித்து படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். லைட் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். இவர்கள் மனிதர்களா மிஷன்களா என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனால், நமக்கு இந்த கஷ்ட்டங்கள் எதுவுமே தெரியவில்லை. சினிமா என்றால் ஜாலி, ஒரே கூத்து கும்பாளமாக இருக்கும் என்று நினைக்கிறோம். கதை விவாதம் எடுத்துக் கொண்டால் கூட செத்து சுண்ணாம்பாகி விடுகிறோம். ஒரு படம் எடுக்கவே எனக்கு இப்படி இருக்கிறதே, மேடையில் இருப்பவர்கள் இத்தனை படங்களை எப்படி தான் எடுத்தார்களோ.
இயக்குநர் குணா குடிபோதைக்கு அடிமையாகி என்னிடம் வந்தார். அவர் யார் சொல்வதையும் கேட்காத ஒரு நிலையில் இருந்தார். 8 வயதில் ஆர்ம்பித்த சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். அவர் முதல் முறையாக மற்றவர் சொல்வதை கேட்டது என்னிடம் தான். அப்போது என்னிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன், என்று சொன்னவர். இதை இந்த அறையில் மட்டும் செய்யாமல் அனைவரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்காக என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம், அனைத்தையும் மென்மையாக சொல்லக்கூடியவர். பிறகு படம் எடுக்கலாம் என்று சொல்லி, என்னிடம் தொடர்பில் இருந்தார். படம் தொடங்கலாம் என்று நான் சொன்ன பிறகு பதற்றமடைந்து விட்டார், அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. உடனே அவரை அழைத்து, எந்த காலத்திலும் என் காசை ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் ஜெயிக்க வில்லை என்றால் நமக்கு அதிஷ்ட்டம் இல்லை என்று நினைத்துக் கொள்வோம். தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை பண்ணுங்க, என்று சொன்னேன். எனக்கு செலவு வைக்க கூடாது என்று கடந்த மூன்று மாதங்களாக இட்லியும், தயிர் சாதமும் தான் சாப்பிடுகிறார், நானும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கு செலவு வைக்க கூடாது என்று இப்படி செய்கிறார். நட்டி சாரை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவர் ஒகே சொன்னவுடன் பதற்றமடைந்து விட்டார். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த நிலையிலேயே படம் எடுத்தார். குணா எப்படிப்பட்டவர் என்றால் சினிமாவுக்காக சாக கூடியவர். ஐந்து பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சினிமாவுக்காக வாழும் ஒரு நபர் அவர். நானும் இந்த சமூகத்தில் இருந்து தான் முன்னேறியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதால் தான் நான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். நாங்கள் இணைந்து சிறிய வீடு கட்டியிருக்கிறோம், அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேடுக்கொள்கிறேன்.
நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நட்டி சார் மிக சிறந்த மனிதர். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். கேரவேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை, ரோட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு தயாரிப்பாளரின் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். நிஷாந்த், பாடினி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளரை கசக்கி பிழிச்சி காயப்போட்டிருக்கிறேன். என் இசையமைப்பாளர் திறமையானவர், ஆனால் நாம் கேட்கும் போது பாடல்கள் கொடுக்க மாட்டார். தீபாவளிக்கு பேண்ட் கேட்டால் பொங்கலுக்கு தான் கொடுப்பார், அது ஒன்று தான் அவரது பிரச்சனை. மற்றபடி சிறந்த இசையமைப்பாளர் அவர், எம்.எஸ்.வி உடன் அவரை ஒப்பிடலாம் அந்த அளவுக்கு சிறந்த இசையமைப்பாளர். இவர்களுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவேன். ஆறு கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒன்றில் மீண்டும் நட்டி சார் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில், வெற்றி தோல்வியை பார்த்து நானும், இயக்குநரும் பயப்பட போவதில்லை. நிச்சயம் தொடர்ந்து படம் பண்ணுவோம், நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “எத்தனையோ ஜாம்பவான்களையும், சாதனையாளர்களையும் எழுத்துக்கள் மற்றும் விமர்சனங்களால் உருவாக்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் முன்பு நான் இங்கு நிற்பது பெருமையாக இருக்கிறது. இதே பிரசாத் லேபில் பல நிகழ்ச்சிகளை ஒரு ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். இன்று இதே அரங்கில் நான் மேடை ஏறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கடவுள் பக்தி அதிகம். எதுவாக நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய், என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, இந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக நான் ஓடியிருக்கிறேன். என்னிடம் தீமை செயல்கள் அனைத்தும் இருந்தது, அதையெல்லாம் கடந்து இன்று இங்கு நிற்கிறேன். இதற்கு காரணமான சிவன் என் தயாரிப்பாளர், பார்வதியாக அவரது மனைவி சுகுணா மேடம், இவர்களால் தான் இங்கு நிற்கிறேன். தயாரிப்பாளரிடம் ஒரு நோயாளியாக தான் நான் அறிமுகம் ஆனேன். அப்போது அவர் என்னை விசாரித்த போது, என்னைப் பற்றி சொன்னேன். அப்போது அவர் சொன்னார், ஒரு நாள் நாம் பண்ணுவோம். அதில் இருந்து அவரை பின் தொடர்ந்தேன், நம்ம பண்ணலாம் என்று சொன்னார். அந்த நாளில் இருந்து என் வாழ்க்கை தொடங்கியது. கதைப் பற்றி பேசும் போது, வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு எதையாவது சொல்ல வேண்டும், என்றார். அதன்படி, அவரே ஒரு கதையும் சொன்னார். அந்த கதை மிக நன்றாக இருந்தது, நிச்சயம் சமூகத்திற்கு தேவையான ஒரு கதை. அதற்கு நான் திரைக்கதை அமைத்தேன். தயாரிப்பாளர் சாருக்கும், மேடமுக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
அதேபோல், முகம் தெரியாத எனக்கு முகம் கொடுத்த எங்கள் தலைவன் நட்டி சார். நான் யாரிடமும் முறையாக உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. சில இயக்குநர்களிடம் பயணித்திருக்கிறேன், அவர்களின் படங்களில் சில வேலைகளை நானே செய்து பல விசயங்களை கற்றுக்கொண்டேன். நடிப்பதற்காக தான் நான் போனேன், அப்படி போய் தான் பல விசயங்களை அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அப்படி இருந்த என் மீது நம்பிக்கை வைத்து நட்டி சார் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். உலகத்தில் மோசமானவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், தேடினால் இந்த உலகத்தில் தங்கம், வைரம் கிடைக்கும். அப்படி தான் எனக்கு தங்கமாகவும், வைரமாகவும் கிடைத்தவர் நட்டி சார். அவரது கம்பீரம் எனக்கு பிடிக்கும். அவர் முன்பு எனக்கு பேச்சே வராது. இன்று அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது, அவரை வசதியாக வைத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர் எனக்காக இந்த படத்தில் நடிக்க வந்தார். என்னை டைரக்ட்டரே என்று முதலில் அழைத்தவர் அவர் தான். அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அவரை நான் சந்திப்பதற்கு முன்பு நல்ல நடிகராக தான் தெரியும், அவரை சந்தித்த பிறகு அவரை விட நல்ல மனிதர் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள், என்று தோன்றியது. அந்த அளவுக்கு மிக சிறப்பானவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாது. தம்பி நிஷாந்த் ரூசோ இளம் நடிகர். இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான இடத்தையும் நட்டி சார் கொடுத்தார். அதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிஷாந்த் ரூசோ நிச்சயம் பெரிய நடிகராக வருவார். நாயகி பாடினி குமார், சிறந்த நடிகை. கிளிசரின் கூட இல்லாமல் நடிக்க கூடிய நடிகை. அவங்க தமிழ் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவாங்க. மூர்த்தி, ஆர்.எஸ்.ரவி, தயாரிப்பாளர் ராஜநாயகம், ஆதேஷ் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் மேடையில் இருக்கிறார்கள். கஸ்தூரி ராஜா சாரின், படங்களை பார்த்து நான் அழுவேன், அந்த அளவுக்கு அவரது படங்களில் இருக்கும் செண்டிமெண்ட் பிடிக்கும். நான் நேசித்த, நான் டாப் என்று நினைத்த இயக்குநர்களில் இருக்கும் கஸ்தூரி ராஜா சாரை வரவேற்கிறேன். விஜய் சாரை வைத்து பட்டய கிளப்பிய பேரரசு சாரை வரவேற்கிறேன். சிறிய படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கே.ராஜன் சாரை வரவேற்கிறேன். டிரெண்ட் மியூசிக் குழுவுக்கு நன்றி. என் படத்திற்கு தூணாக இருந்து என்னை இயக்கிய அக்கறை பாலு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இசை குறுந்தகட்டை இயக்குநர் கஸ்தூரி ராஜா வெளியிட கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.