“வணங்கான்” திரைப்பட விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ், ரிதா, டாக்டர். யோகன் ஜாக்கோ, சண்முக ராஜா, அருள்தாஸ், தரண் மாஸ்டர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வணங்கான்”. வாய்பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளியான அருண் விஜய், கன்னியாகுமரியிலுள்ள மகளிர் மாற்றுத்தினாளிகளுக்கான காப்பகத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். அதே காப்பகத்தில் வேலை பார்க்கும் இரண்டு நபர்களை கொடுரமான முறையில் உயிருடன் கழுமரத்தில் ஏற்றி கொலை செய்கிறார் அருண் விஜய். கொலை செய்ததிற்கான காரணத்தை போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியிடமும் நீதிபதியான மிஷ்கினிடமும் சொல்ல மறுக்கிறார் அருண் விஜய்.

கொலைக்கான காரணத்தை ஏன் சொல்ல மறுக்கிறார்?. கொலைக்கான காரணத்தை சமுத்திரக்கனி கண்டுபிடித்தாரா?. கொலைகாரரான அருண் விஜய்க்கு நீதிபதி மிஷ்கின் என்ன தண்டணை கொடுத்தார்? என்பதுதான் கதை. பாலாவின் படம் என்றாலே முரட்டுத்தனமும் அரசியல் பூச்சும் நகைச்சுவையும் கலந்த கலவையாகத்தான் இருக்கும். வணங்கான் திரைப்படமும் அதே பாணியில்தான் படமாகியிருக்கிறது. அரசியல் நையாண்டித்தனம் திரைக்கதையில் ஆங்காங்கே பளிச்சிடுகிறது. அருண் விஜய்யின் கதாபாத்த்கிரம் பாறையில் நீர் சுரக்கும் கதாபாத்திரம். முரட்டுதனத்துடன் அடிதடியில் இறங்கும் அருண் விஜய்யிடம் பாசம் பரிவு என்ற நீரோட்டமும் வழிந்தோடுகிறது. கதபாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாங்கி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் முன்பகுதி முழுவதும் சுற்றுலா வழிகாட்டியாக நடித்திருக்கும் ரோஷினி பல மொழிகளில் பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். விவேகானந்தராக நடித்துக்காட்டும் காட்சியிலும் சீனத்துப் பெண்ணாக வந்து அல்லோலப்படும் காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். கராரான போலீஸ் அதிகாரிக்கும் கடுகடுப்பான நீதிபதிக்கும் பொறுத்தமானவர்கள் சமுத்திரக்கனியும் மிஷ்கினும்.
அருண் விஜய்யின் தங்கையாக வரும் ரிதா, பாசத்துக்காக அழுது புலம்பித் திரியும் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார். கொலைக்குற்றவாளி அருண் விஜய்யை குறித்து சமுத்திரக்கனி நீதிபதி மிஷ்கினிடம் கொடுத்த அறிக்கையில், நீதிதேவதையின் கண்ணில் கட்டப்பட்டிருக்கும் கறுப்புத்துணியை இயக்குநர் பாலா தைரியமாக 
அவிழ்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் பாலா. மதிப்பீடு 5க்கு 3.75.