“பூர்வீகம்” திரைப்பட விமர்சனம்

டாக்டர் ஆர்.முருகானந்த் தயாரிப்பில் ஜி. கிருஷ்ணன் இயக்கத்க்தில் கதிர், மியாஶ்ரீ, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பூர்வீகம்”. போஸ் வெங்கட்டின் அப்பா சங்கிலி முருகன் தனது பேரனை விவசாயியாக வளர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் போஸ் வெங்கட் தனது மகனை படிக்க வைத்து அரசாங்க அதிகாரியாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். போஸ் வெங்கட்டின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் கதை. இக்கதை 1950 ஆம் ஆண்டில் பரம்பரை விவசாயக் குடும்பத்த்தின் பூர்வீக குடியில் இளவரசு முதல் தலைமுறையாகவும், சங்கிலி முருகன் இரண்டாவது தலைமுறையாகவும் போஸ் வெங்கட் மூன்றாவது தலைமுறையாகவும் அவரின் மகன் கதிர் நான்காவது தலைமுறையாகவும் போஸ் வெங்கட்டின் பேரன் 2024ல் ஐந்தாவது தலைமுறையாகவும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணன். விவசாயத்தின் பெருமையை இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் படம் பிரதிபலிக்கிறது. தன்மானமிக்க வாழ்க்கையை, மண்ணை நம்பி வாழும் மனிதர்கள்தான் பெற முடியும். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவரே” என்று வள்ளுவப் பெருந்தகையின் கூற்றை மெய்பிக்கும் வகையில் இத்திரைப்படத்தில் விவசாயத் தொழிலை உயர்த்தியிருக்கும் இயக்குநர் பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உரியவர். 1950 ஆம் ஆண்டுகளில் மாமியார் மருமகளின் உறவு, தாய் மகளுக்கு நிகரான உறவாக தொண்டு தொற்றுவரும் தமிழர்களின் பண்பாட்டை திரையில் காணமுடிகிறது. கிராமத்து மண்வாசனையை நுகரச் செய்திருக்கிறார். பேரனை படிக்க வைக்க விவசாய நிலங்களை விற்று கஷ்டப்படும் காட்சியிலும், பட்டணத்து மருமகள் தன்னை அவமானப்படுத்தும் காட்சியிலும், தான் வேலை செய்யும் மதுக்கடையில் தன் பேரனைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழும் காட்சியிலும் போஸ் வெங்கட் அபாரமாக நடித்து பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். குடும்பத்தலைவனுக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறார் கதிர். படத்தின் உச்சக்கட்ட காட்சியில் படத்தின் முடிவை கண்ட பாரவையாளர்களை திரையரங்கில் எழுந்து நின்று கைத்தட்ட வைத்துவிட்டார் இயக்குநர் ஜி. கிருஷ்ணன். ஒவ்வொரு பார்வையாளர்களும் தங்களது பூர்வீகத்தை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். மதிப்பீடு 5க்கு 4.