பா.ரஞ்சித், டி.என்.அருண் பாலாஜி ஆகியோரின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பாட்டல் ராதா”. கட்டிட தொழிலாளியாக இருப்பவர் குருசோமசுந்தரம். மொடாக் குடிகாரன். மனைவி சஞ்சனாவையும் இரண்டு குழந்தைகளையும் கவனிக்காமல் மதுக்கடையே தஞ்சமென்று வீழ்ந்து கிடக்கிறார். குருசோமசுந்தரத்தின் தொல்லை தாங்காமல் ஜான்விஜய் நடத்தும் போதையரின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுகிறார் மனைவி சஞ்சனா. அங்கு நடக்கும் கெடுபிடி தாங்காமல் மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுகிறார். வெளியே வந்த குருசோமசுந்தரம் பிறகு என்ன ஆனார்? என்பதுதான் கதை. படத்தின் முன்பகுதி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பவர்களின் கோரிக்கைகளும் மாறனின் நகைச்சுவை காட்சிகளும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. பலபடங்களில் வில்லனாகவும் நகைச்சுவையாளனாகவும் நடித்த ஜான்விஜய் இப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். குடிகாரனின் மனநிலையை நன்றாக அறிந்து அதை அப்படியே திரையில் காட்டியிருக்கும் குருசோமசுந்தரம் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். குடிகாரகளின் இயல்பான வாழ்வியல் இடங்களை (மதுக்கடை மற்றும் குட்டிச்சுவர்) தத்ரூபமாக திரையில் காட்டியிருகிறார் ஒளிப்பதிவாளர் சுரேன். சமூக சீர்திருத்த கருத்துகளும் அரசியல் நையாண்டி உரையாடல்களும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. சமூக சீர்திருத்த சிந்தனையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஒவ்வொரு குடிமகனும் தன் குடுப்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் “பாட்டல் ராதா”. மதிப்பீடு 5க்கு 3.5.