“ரசாயனம், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (23.01.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கியது. மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் சிஷிர் சின்ஹா இதனைத் தொடங்கி வைத்தார். ரசாயனம், பெட்ரோ ரசாயன துறையில் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்த தேவையான பயிற்சியை வலுப்படுத்துவதற்கு இந்தப் பயிற்சி முகாம் முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசின் ரசாயனம், பெட்ரோலிய ரசாயனத் துறை நாடு முழுவதும் உள்ள 2393 தொழிற்சாலைகளுக்கும் ரசாயனப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க முன்முயற்சி எடுத்துள்ளது. இந்தவகையில் சென்னையில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாம் நான்காவதாகும். இதில் 65ரசாயன மற்றும் பெட்ரோ ரசாயன தொழிற்சாலைகளிலிருந்து 113 பேர் பங்கேற்றுள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ரசாயனம், பெட்ரோ ரசாயனத் தொழில்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே சமயம், இத்துறை அபாயங்களையும் உள்ளடக்கியது. குறிப்பாக அபாயகரமான பொருட்களைக் கையாளும் பிரிவுகளில். மனித உயிர்களைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்வதும் திறன் வாய்ந்த முறையில் பயிற்சி அளிப்பதும் அவசியம் ஆகும். பாதுகாப்பை உறுதிசெய்யவும் விபத்துக்களைத் தடுக்கவும் தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் ஊழியர்களை தயார்படுத்துவதே ரசாயன பாதுகாப்பு மேலாண்மை குறித்த இதுபோன்ற சிறப்பு பயிற்சி முகாம்களின் நோக்கமாகும்.