சுரபி பிலிம்ஸ் மோகன் தயாரிப்பில் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகிபாபு, ஓவியா, பாகுபலி பிரபாகர், சயாஜி, ரஹவான் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ராஜபீமா”. ஆரவ் சிறுவயதாக இருக்கும்போது தாயை இழந்துவிடுகிறார். அவருடன் விளையாட ஒரு யானைக்குட்டியை வாங்கி கொடுக்கிறார் அப்பா நாசர். யானைக்குட்டியும. (பீமா) ஆரவ்வும் (ராஜா) அண்ணன் தம்பி பாசத்தோடு பெரியவர்களாகி விடுகிறார்கள். ஒருநாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டதாக கூறி வனத்துறையினர் யானை பீமாவை பராமரிப்பு முகாமுக்கு கொண்டு செல்கிறார்கள். இதை அறிந்த ஆரவ் யானையை திருப்பி கூட்டிவர முகாமுக்கு செல்கிறார். அவரிடம் “உன் யானை குணமாகிவிட்டது அழைத்துக் கொண்டுபோ” என்று ஒரு யானையை வனத்துறையினர் காட்டுகிறார்கள். “இந்த யானை என்னுடையதில்லை, என் யானை பீமா எங்கே?” என்று ஆரவ் கேட்கிறார். ஆரவ் வளர்த்த யானை பீமா என்ன ஆனது? ஏன் வனத்துறையினர் பீமாவை கடத்தினார்கள். என்பதுதான் கதை. யானையுடன் பாசத்தோடு பழகும் போதும் பிறகு யானையின் பிரிவால் வாடிவதங்கும் காட்சியிலும் ஆரவ்வின் நடிப்பு அனைவரையும் ஈர்கிறது. யானைத் தோழனுக்கேற்ற உடற்கட்டுடன் ஆரவ் பிரகாசிக்கிறார். அடாவடித்தனம் செய்வதுதான் வில்லத்தனம் என்பதை பொய்யாக்கி, வில்லத்தனத்தை சிரித்துக் கொண்டேயும் செய்யலாம் என்ற விதியை வகுத்திருக்கிறார் கே.ஏஸ்.ரவிக்குமார். யாஷிகா ஆனத்துக்கும் ஓவியாவுக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லையென்றாலும் வனப்பான உடற்கட்டுடன் மினுமினுக்கிறார்கள். யோகிபாபுவின் கலாட்டா கதையை தொய்வில்லாமல் கடத்திச் செல்ல உதவியிருக்கிறது. நாட்டுப்புற இசையை கேட்டு தாளம்போட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சிமோன் கே கிங்க். கதையை, ‘ஜாதகம் ஷோஷியம்’ என்ற குதிரையிலேற்றி சவாரி செய்திருக்கிறார் இயக்குநர் நரேஷ் சம்பத். மதிப்பீடு 5க்கு 3.