மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்படுவதற்கு மதிப்புமிக்க ஆதார வளமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான தருணம் இது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். சென்னை அருகே உள்ள முட்டுக்காட்டில் இயங்கி வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செவித்திறன் – கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது தேசிய கருத்தரங்கிற்கு. தலைமை வகித்து சிறப்புரை ஆற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இவ்வாறு கூறினார். கல்வி, எளிதில் அணுகத்தக்க சூழல், நலன் சார்ந்த திட்டங்கள் இவை அனைத்திலும் செவித்திறன்- கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம் என்பது இந்த கருத்தரங்கின் மையப்பொருளாகும்.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு இல்லாமல் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற இலக்கு சாத்தியமாகாது என்றும் திரு தன்கர் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இயக்க ரீதியாக செயல்பட பிரதமர் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் திறமையை பயன்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க கடந்த 10 ஆண்டுகளாக பல கொள்கைகள் உருவாக்கப்பட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அச்சுறுத்தும் நிலைமைகளை கடந்து வெற்றி ஈட்டுபவர்களாக மாற்றுத்திறனாளிகள் விளங்குகிறார்கள் என்றும் இந்திய பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஏராளமான பதக்கங்களை வென்றிருப்பது இதற்கு சான்று என்றும் அவர் தெரிவித்தார். சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான உணர்திறன் தேவை என்று திரு தன்கர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே லட்சுமண், திருச்சி சிவா, ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் நசிகேத ரவுத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கரும், சுதேஷ் தன்கரும், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு உரையாடி அன்பை பகிர்ந்து கொண்ட தன்கர், ஐந்து பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.
தில்லியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனமாகிய செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம், சென்னையில் உள்ள வித்யாசாகர் நிறுவனம் மற்றும் சேட்னா அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் சமிர் தாலே வரவேற்புரை ஆற்றினார்.