பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. துப்பறியும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, விளம்பர அழகியான நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். துப்பறியும் பாணியில் இந்த படம் விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது.******
இந்தநிலையில் தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த சீனியர் இயக்குநர்கள் முதல் சமீப காலமாக சின்ன சின்ன படங்களில் கூட தங்களது முத்திரைகளை அழுத்தமாக பதித்து வரும் இளம் இயக்குநர்கள் வரை மொத்தம் 75 பேரும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, விஷால், ஆர்யா, சரத்குமார், அருண்விஜய் மற்றும் யோகி பாபு என 6 பேரும் இன்று (ஜன-31) மாலை 6:04 மணிக்கு இந்த படத்தின் டிரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். சினிமா வரலாற்றிலேயே இப்படி இத்தனை பிரபலங்கள் ஒரு படத்தின் டிரைலரை ஒன்றிணைந்து வெளியிடுவது என்பது இதுவே முதன்முறை.
இந்த டிரைலர் வெளியீடு குறித்து ‘அஸ்திரம்’ பட இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூறும்போது, ‘அஸ்திரம்’ படத்தை வெகு ஜன மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக இந்த டிரைலர் வெளியீட்டை நடத்த முடிவு செய்தோம். அதற்காக நாங்கள் பல இயக்குனர்களை அணுகியபோது அனைவருமே எந்த மறுப்பும் சொல்லாமல் எங்களுக்கு அன்புடன் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல படத்தின் டிரைலரை பார்த்த பெரும்பாலான இயக்குநர்கள் இந்த படம் நடிகர் ஷாமுக்கு இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி வைக்கும் படமாக இருக்கும் என உறுதிபட கூறினார்கள்.
மேலும் நடிகர் ஷாமும் இந்த படம் உருவாகியுள்ள விதம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வரும் பிப்ரவரி இறுதி வாரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. என்று கூறியுள்ளார். பார்க்கிங், மகாராஜா, கருடன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை வெளியிட்ட பைவ் ஸ்டார் நிறுவனம் ‘அஸ்திரம்’ படத்தை தமிழகமெங்கும் வெளியிட இருக்கிறது.. ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். கலை வடிவமைப்பை ராஜவேல், சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்கள்.