கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாகக் காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறியிருக் கிறார்கள் என்றால் அது தந்தை பெரியாரின் சமூக நீதிக்கான அறப்போராட்டமே வித்தாக விருட்சமாக அமைந்திருந்தது. தமிழகத்தின் முன்னேற்றம் தந்தை பெரியாரின் கடும் உழைப் பின் விளைவாக உருவாகிய திராவிட கட்சிகளின் ஆட்சியால் உருவாக்கப்பட்டது. சமூக நீதியின் கொள்கையால் சாமானிய மக்கள் முன்னேற்றம் அடைந்ததை விரும்பாதவர்கள் தான் பெரியாரின் எதிரிகளாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தமான உண்மையாகும். சமீப காலமாகத் தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. பெரியார் சிலைகளை இழிவுபடுத்துபவர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி கடந்த காலங்களில் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விட்டதின் விளைவாகவே தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெரியார் சிலையை இழிவுபடுத்தும் செயல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த தொடர் வஞ்சக செயலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இச்செயலில் ஈடுபட்டுள்ள கயவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். பெரியாரின் அரும் பெரும் தொண்டினால் விளைந்த சமூக நீதி கொள்கைக்கு விரோதமானவர்களின் இந்த இழிச் செயலை தீர விசாரித்து அவர்களை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையாகத் தண்டிப்பது தான் அதிமுக அரசுக்குப் பெரியாரின் பெயரைச் சொல்லுவதற்குத் தகுதியான அரசு என்ற நிலையை ஏற்படுத்தும். இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.