நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜெ.பி.  இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில்  பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.**********

தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில், ” திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என  எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.  நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.