தனது பிறந்தநாளில் தந்தை இல்லாத, வாய் பேச முடியாத அம்மாவை உடைய ஏழைச் சிறுமியை தத்தெடுத்து உள்ளார் தென்காசி காவல்நிலைய ஆய்வாளரான ஆடிவேல். தென்காசி காவல்நிலைய ஆய்வாளாராக பணியாற்றி வருபவர் ஆடிவேல். போலீஸ் உங்கள் நண்பன் என்பதற்கு சரியான உதாரணமாக இயங்கி வருகிறார் இவர். கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்ட போது சாப்பாடு, மருந்து உள்ளிட்ட உதவிகள் தேவைப்படுவோர் தனது மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்து உரியவர்களுக்கு உதவி செய்தார். மேலும் பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படுவோ ருக்கு தனது போலீஸ் காரை அனுப்பி வைத்து உதவியதற்காக சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்றார்.
இதற்கு முன்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தபோது விபத்தில் உயிரிழந்த ஒரு தந்தையின் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து, அக்குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் குடும்பச் செலவை ஏற்று இன்றும் உதவி வருகிறார். தற்போது தென்காசி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் ஆடிவேல் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். காவல் நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்கள் வாசிப்பதற்கு வசதியாக மினி நூலகம் ஒன்றும் அமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆடிவேல், சுமித்ரா என்ற ஏழைச் சிறுமியை தத்தெடுத்து இருக்கிறார். தென்காசி மாவட்டம் தேசியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் சுமித்ராவின் சலவைத் தொழிலாளியான தந்தை சமீபத்தில் இறந்துபோனார். தாயாரால் வாய் பேச முடியாது; காது கேட்காது. இதனால் தாயும் மகளும் வருமானமின்றி பரிதவித்து வந்துள்ளனர். இத்தகைய ஏழ்மையான பின்னணி கொண்ட சிறுமியை தத்தெடுத்து நிதி உதவி வழங்கி வாழ்நாள் முழுவதும் உதவுவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்ஸ்பெக்டரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது.