பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக, தமிழக அரசு பொது முடக்கத்தை அறிவித்தவுடன், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முடக்கம் தளர்த்தப்பட்டு, ஆலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் எல்லாம் தற்போது இயங்குகின்றன. மருத்துவ பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலாளருக்காக பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்கிறது. ஒப்பந்த பேருந்துகளும் இயங்குகின்றன. ஆனால் பொதுப் போக்குவரத்து ஜூன் மாதம் மட்டும் இயக்கப்பட்டது. பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. நிறுவனங்களில் பணிபுரிகிற தொழிலாளர்கள், பொருள்கள் வாங்கவும் பணி நிமித்தமாகவும் பயணப்படும் மக்கள் என பல லட்சக்கணக்கானோர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். மிகக் குறைந்த வருவாய் பெறும் அடித்தட்டு மக்களே, பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சம்பளத்தின் பெரும்பகுதியை போக்குவரத்துக்காக அவர்கள் செலவிட முடியாது. போதிய சுகாதாரமான நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டு, தனிமனித இடைவெளியுடன், பொது பேருந்து போக்குவரத்து மற்ற மாநிலங்களில் போன்று இயக்கப்பட வேண்டும். இனியும் நிறுத்தி வைப்பதில் பொருளில்லை.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறைகளால் பல இழப்புகளை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். அங்கு செயல்பட்டுவரும் தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு அவை பற்றி தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசும், சம்பந்தப்பட்ட நிர்வாகங்களும்
அக்கோரிக்கைகளைப் பரிசீலித்து தீர்வுகாண முன்வரவில்லை. எனவே தொழிற்சங்க தலைவர்கள் சென்னையில் 22.7.3020 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. தொழிற்சங்க தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்து, வெற்றி பெற வாழ்த்துகிறது என இரா.முத்தரசன் அறிக்கையில் கூறியுள்ளார்.