போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது. தைரியமாக இருங்கள். உறுதியாக நில்லுங்கள். உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம்; திமுக இருக்கிறது; நான் இருக்கிறேன், தீர்வு கிடைத்தே தீரும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும், கண்ணீர் கலந்த வேதனை மடல். மாணவ மணிகளின் மருத்துவக் கனவை அறுத்துச் சிதைக்கும் நீட் எனும் கொடுவாளின் கொடூரத்தன்மையை 2017-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, திமுக.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவச் சமுதாயத்தினர் பங்கேற்ற கருத்தரங்குகளை நடத்தி, நீட் தேர்வு எதிர்காலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை எடுத்துரைத்தது கழகம். கழக நிர்வாகிகள் மட்டுமின்றி, கல்வியாளர்கள் – மருத்துவர்கள் – சட்ட அறிஞர்கள் உள்ளிட்டோரும் அத்தகைய கருத்தரங்கில் பங்கேற்றனர். எதிர்காலத்தை இருளாக்கிவிடும் நீட் தேர்வு பற்றி நாம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்த நேரத்தில்கூட, அது இந்த அளவுக்கு உயிர்களைப் பறிக்கும் கொடுமையான பலிபீடமாக இருக்கும் எனச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நீட் தேர்வுக்கான பயிற்சியில் தொடங்கி, தேர்வு அறைக்குள் நுழைவதற்கான சோதனைகள் வரை, ஒவ்வொன்றும் மாணவச் செல்வங்களை உளவியல் ரீதியாக பெரும் தாக்குதலுக்குள்ளாக்கி நிலை குலைய வைக்கின்றன. தேர்வு உண்டாக்கும் மனவேதனையால் 2017-ல் அரியலூர் அனிதா தொடங்கி, இன்று மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா வரை மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேள்விப்படும் போதெல்லாம் பரிதவித்துப் போகிறேன்.மாணவர்கள் ஏன் இத்தனை துயரமான முடிவைத் துணிந்து எடுக்கிறார்கள்? மருத்துவர் என்னும் பெருங்கனவைச் சுமந்து வளர்ந்த அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் மீது நீட் என்னும் பெரும் பாறாங்கல்லை வைத்து நசுக்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு.
மாணவன் தற்கொலைக் குறித்து, ‘மன உளைச்சலால் இறந்த மாணவன்’ என்று இரங்கல் குறிப்பு எழுதியிருந்தார் முதல்வர் பழனிசாமி. எதனால் அந்த மன உளைச்சல் என்பது கூட முதல்வருக்குத் தெரியாதா அல்லது தன் அரசின் தவறை மறைக்க முயற்சிக்கிறாரா? ஒவ்வொரு மாணவரும் இறக்கும் போதும் அஞ்சலி செலுத்துவதோடு எல்லாமும் முடிந்துவிடுகிறதா? அவர்கள் நம் வீட்டுக் குழந்தைகள் இல்லையா? நீட் ஏற்படுத்திய பாதிப்பால் – அச்சத்தால் – நெருக்கடிகளால் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவ மணிகளின் உள்ளத்தின் நிலையைப் புரிந்துகொள்ளாமல் திசை திருப்பும் மனிதநேயமற்ற போக்கையும் அடிமை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு தாக்கத்தால் சில நாட்களுக்கு முன் உயிரைப் போக்கிக்கொண்ட புதுக்கோட்டை மாணவி ஹரிஷ்மா, வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்டார் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
இழப்பீட்டுத் தொகையை வழங்கவும் அதிமுக அரசு முன் வரவில்லை. நீட் விவகாரத்தில், தன் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கு, இத்தகைய திரிபு வேலைகளைச் செய்கிறது. மாணவர்களின் பிரச்சினைக்குக் குறுகியகாலத் தீர்வு என்ன என்பதையும் நீண்டகாலத் தீர்வு என்ன என்பதையும் மத்திய – மாநில அரசுகள் யோசிப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் தன் விருப்பப்படி திணித்து விடலாம் என இறுமாப்புடன் செயல்படுகிறது மத்திய அரசு. எது நடந்தாலும் எங்களுக்குப் பதவி நிலைத்தால் போதும் என அடங்கிக் கிடக்கிறது அதிமுக அரசு. இரண்டு அரசாங்கத்தாலும் நெய்யூற்றி வளர்க்கப்படும் “நீட்” எனும் கொடும் நெருப்புக்கு இரையாகிறது, மாணவ சமுதாயம்.
“அரசுகளே எமனாகி விட்டனவே!” எனக் கலங்கும் மாணவச் சமுதாயமே உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு இனி ஒருவரும் செல்லாதீர். எதற்கும் கலங்கிட வேண்டாம். எல்லாவிதமான ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும், அநீதிகளையும் எதிர்த்துத் திமிறி எழுந்த இனம், நம் தமிழ் இனம். அந்தக் குணம் உங்களுக்கும் அவசியம். போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது. தைரியமாக இருங்கள். உறுதியாக நில்லுங்கள். உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம்; திமுக இருக்கிறது; நான் இருக்கிறேன்; தீர்வு கிடைத்தே தீரும்!
2008-ம் ஆண்டில் நிகழவிருந்த அநீதி நினைவுக்கு வருகிறது. பட்டியலின மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்’ பெற வேண்டுமானால் 60% மதிப்பெண்கள் கட்டாயம் என்று அப்பொழுது மத்திய சமூகநலத்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பட்டியலின மாணவர்கள் பரிதவித்த போது முதல்வராக இருந்த கலைஞர், ‘தமிழகத்தில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதுவே தொடரும். எந்த வரையறையும் வகுக்கப்படாது’ எனச் சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். அவரது வழிநடக்கும் திமுகவின் ஆட்சி – கலைஞரின் ஆட்சி, இன்னும் எட்டு மாதங்களில் தமிழகத்தில் அமையும் போது, நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். அதுவரையிலும் நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும் அவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அவர்கள் பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின்படி மருத்துவம் படிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் அமையவிருக்கும் திமுக அரசு உருவாக்கித் தரும். அது மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட வேண்டிய தேவை ஏற்பட்டாலும் சரி. நீட் அமல்படுத்தப்பட்ட பிறகு கருகிய மாணவர்களின் மருத்துவக் கனவுகளைத் துளிர்க்கச் செய்திட எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி. அருமை மாணவச் செல்வங்களே. எட்டு மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள். கலங்காதிருங்கள். அவசர முடிவுகள் எதையும் எடுத்திடாமல் காத்திருங்கள். விடியல் பிறக்கும் என மாணவச் செல்வங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே. வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழக மாணவ சமுதாயமாக இருக்கட்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடன், இதனை ஒவ்வொரு மாணவ – மாணவியிடமும் எடுத்துரைத்து நம்பிக்கையை விதையுங்கள். இன்னொரு அனிதாவோ, மற்றொரு ஜோதிஸ்ரீ துர்காவோ இந்தக் கொடூர முடிவுக்கு ஆட்படக்கூடாது. டாக்டர் அனிதா, டாக்டர் ஜோதிஸ்ரீ துர்கா, டாக்டர் விக்னேஷ் என்கிற கனவு நிறைவேற நாம் உழைப்போம். ஆட்சி அமையும்வரை அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்து, நாம் தொடர்ந்து போராடுவோம். வெற்றியினை ஈட்டி, வேதனைக் கண்ணீரைத் துடைத்திடுவோம்”. இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.