ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. 3-ம் கட்ட பரிசோதனை பாதுகாப்பானதுதான், அந்தப்பரிசோதனையைத் தொடரலாம் என்று பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆக்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்ட்டியூட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்குக் கடுமையான பக்கவிளைவுகள் கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் மருந்தின் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை செரம் மருந்து நிறுவனம் நடத்தி வந்தது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியததைத் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், கோவிஷீல்ட் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை குறி்த்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மருந்து பாதுகாப்பானது எனத் தெரியவந்ததையடுத்து, மீண்டும் கிளினிக்கல் பரிசோதனையைத் தொடங்க பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு மருந்தான ஏஇசட்டி1222 மருந்தின் 3-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மீண்டும் தொடங்க பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது. எங்கள் மருந்து தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு மேல் வேறு எந்த தகவலையும் பரிமாற முடியாது. கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் உடல்நலத்தில் அஸ்ட்ராஜென்கா தீவிரமான அக்கறை கொண்டு, உயர்ந்த தரத்தில் பரிசோதனை நடத்தப்படுகிறது. உலகளவில் உள்ள மருத்துவ வல்லுநர்களுடனும், அதிகாரிகளுடன் தொடர்ந்து இனி சேர்ந்து பணியாற்றி, கிளினிக்கல் பரிசோதனையை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்களை தெரிவித்து, மீண்டும் பரிசோதனையை தொடங்கக் கூறுவோம். கொரோனா பரவல் சூழலில் எந்த லாபநோக்கமின்றி செயல்படுகிறோம். கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்றவர்களின் விவரங்கள் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.