1. செம்மஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திர மாநில நபர் கைது- 6 கிலோ கஞ்சா பறிமுதல் தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் ஆய்வாளர் திரு.P.விஜயன் தலைமையில், உதவி ஆய்வாளர் P.B.தீர்த்தகிரி மற்றும் தலைமைக் காவலர் V.முரளிதரன் (த.கா.16869) ஆகியோர் 15.9.2020 அன்று செம்மஞ்சேரி, ஆலமரம் அருகே கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கஞ்சா வைத்திருந்த ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த மோனீஸ், வ/26, த/பெ.சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை கைப்பற்றி J-10 செம்மஞ்சரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், மேற்படி நபர் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர், கழிபட்டூர் என்ற இடத்திலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ஆந்திராவில் இருந்து கஞ்சா எடுத்து வந்தது தெரியவந்தது.
2. குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக ஆட்டோவில் கத்தியுடன் வந்த 2 பேர் கைது- கத்தி மற்றும் ஆட்டோ பறிமுதல். அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. T-13 குன்றத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் T.ஜான்சன் காவலர் N.கிருபாகரன் மற்றும் ஆயுதப்படை காவலர் மாரிமுத்து (கா.52382) ஆகியோர் 15.9.2020 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 00.30 மணியளவில் (16.09.2020) குன்றத்தூர், வழுதலமேடு என்ற இடத்தில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற TN04 K 9904 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை நிறுத்தியபோது, ஆட்டோவில் இருந்த5 நபர்களும் ஓடவே, காவல் குழுவினர் விரட்டிச் சென்று 2 நபர்களை பிடித்து, ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் கத்தி- 1 மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ஐயப்பன்தாங்கல், கொளுத்துவாஞ்சேரி, அருள்தாஸ் நகரைச் சேர்ந்த மணியரசு, வ/26 மற்றும் ராமச்சந்திரன், வ/20, தப்பிச் சென்ற 3 நபர்களுடன் சேர்ந்து குற்றச் செயலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. அதன்பேரில், பிடிபட்ட நபர்களை, கத்தி மற்றும் ஆட்டோவுடன் T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், விசாரணை நடைபெற்று வருகிறது.
3. அரும்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நபர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றபோது தடுத்து காப்பாற்றிய காவல் ஆளிநர்கள் அரும்பாக்கம், பெருமாள் கோவில் கார்டன் தெருவைச் சேர்ந்த திருநாவுக்கரசு, வ/38 த/பெ, மோகன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இதே தெருவில் வசிக்கும் இவரது மைத்துனர் ரமேஷ், வ/30 என்பவருக்கும் திருநாவுக்கரசுக்கும் நேற்று (15.09.2020) மாலை சுமார் 04.00 மணியளவில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டதால், இருதரப்பையும் சேர்ந்த 5 நபர்களை K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. அப்பொழுது இரவு சுமார் 10.00 மணியளவில், திருநாவுக்கரசு என்பவர் திடீரென கூச்சலிட்டுக் கொண்டே சென்று அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பியிருந்த ஒரு லிட்டர் பாட்டிலை எடுத்து தனது தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகிலிருந்த நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் குணசேகரன் (த.கா.19057) மற்றும் காவலர் மகுடீஸ்வரன் (கா.49327) திருநாவுக்கரசு கையிலிருந்த பெட்ரோல் பாட்டிலை தட்டிவிட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி குறைகளை கேட்டறிந்து, நிலையத்தில் வைத்து ஆய்வாளர் சங்கர் அவர்கள் விசாரணை செய்து அறிவுரைகளோடு வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். காவல் ஆளிநர்கள் தக்க சமயத்தில் துரிதமாக செயல்பட்டு இறப்பை தடுத்துள்ளனர். மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.