ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார்.மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டியும், நித்யானந்த் ராயும், இத்தகவலை தெரிவித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது கொள்கையைப் பரப்ப சமூக ஊடக தளங்களை ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட முகமைகள் இணைய வெளியை தொடர்ந்து கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குற்றச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக தில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், நீதிபதிகள் ஆகியோரிடம் இருந்தும் உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.