மத்திய அரசின் ஒப்புதல் பெற்று பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் விதத்தில் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக முதலமைச்சருடைய அறிவிப்பு நேற்று சட்டமன்றத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மாநில குற்றப் பதிவு ஆணையத்தின் 2019க்கான புள்ளி விவரங்கள், சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கனவே 2020 ஜனவரி முதல் ஜூலை வரையில் நடந்துள்ள குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதலமைச்சருக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்:
1) சட்டமன்ற கூட்டத்தின் ஒரு சிறப்பு அமர்வை நடத்தி பெண்கள் குழந்தைகள் மீதான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விவாதத்தை நடத்திட வேண்டும். 2) அனைத்து அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட கூட்டத்தை நடத்தி, முதலமைச்சர், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகளைப் பெற வேண்டும் 3) பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும், அச்சுறுத்தும் வலைத்தள பதிவுகளை நீக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்கள் மீது பாகுபாடு இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்றவாறு சைபர் குற்றப்பிரிவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். 4) குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதம் குறைவாகவே நீடிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, காவல்துறையின் விசாரணை முறை மற்றும் அணுகுமுறையில் ஆணாதிக்க பார்வை உள்ளிட்ட குறைபாடுகள், நீதிமன்றத்தில் ஏற்படும் நீண்ட காலத்தாமதம் உள்ளிட்ட சிக்கல்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். 5) மதுபான கடைகளைப் படிப்படியாக மூடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 6) இக்குற்றங்களுக்கு தீர்வு காணும் அதிகாரம் பெற்ற அனைத்து துறையினருக்கும் பாலின நிகர்நிலை பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட வேண்டும் 7) குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சமூக செய்திகள் அடங்கிய ஊடக விளம்பரங்களை, தமிழக அரசு ஊடக நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து வெளியிட வேண்டும். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலின சமத்துவம் இடம்பெற வேண்டும். 8) சட்ட அந்தஸ்து பெற்ற மகளிர் ஆணையம், குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் போன்றவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மகளிர் காவல் நிலையங்களை மேம்படுத்துவது, வரதட்சணை தடுப்பு பிரிவு மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவு போன்ற அரசு துறைகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீதி பரிபாலன முறைமையை (Justice delivery system) மேம்படுத்தாமல், அதன் கட்டமைப்பை வலுப்படுத்தாமல், தவறிழைக்கும் அல்லது முறையாக விசாரிக்க மறுக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களது பதில் சொல்லும் பொறுப்பை (Accountability) உறுதிப்படுத்தாமல் தண்டனைகளை மட்டும் அதிகப்படுத்திக் கொண்டே போவது பலன் தராது எனக் கருதுகிறோம். முறையான விசாரணை, சாட்சிகள் பாதுகாப்பு, கால வரையறையோடு கூடிய தீர்ப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதே முன்னுரிமை நடவடிக்கைகளாக இருக்க வேண்டும். இவ்வாறு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.