வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு, வ/40, த/பெ.தலிஷ் என்பவர் அவரது மனைவி, 10 வயது ஆண் குழந்தை, 6 வயது மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை, இராயபுரம் ரயில் நிலைய உள்பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டு, அங்கேயே தங்கி வருகிறார். பப்லுவுக்கு அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் அறிகமுகமாகி பப்லுவுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 06.9.2020 அன்று மேற்படி சுனில், பப்லுவின் குழந்தைகளுக்கு உணவு வாங்கி தருவதாக கூறி 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்று அதில் 2 வயது குழந்தையை மட்டும் கடத்திச் சென்றுவிட்டார்.

இது குறித்து பப்லு, N-1 இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இராயபுரம் சரக உதவி ஆணையாளர் S.தினகரன் தலைமையில், N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் M.காசியப்பன் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியிலுள்ள 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சுனில் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதும், பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றதும் தெரியவந்தது. இதனிடையே சுனில், பப்லுவின் வீட்டில் விட்டுச் சென்ற துணிப்பையில் இருந்த அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் சுனில், மேற்படி குழந்தையுடன் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் கட்டிட வேலை செய்து வரும் வடமாநில நபர்களிடம் வேலை கேட்டு சென்று, பின்னர் கடைக்கு சென்று வருகிறேன் எனக் கூறி குழந்தையை அவர்களிடம் விட்டு சென்று, ஒரு வாரம் கழித்து மீண்டும் அங்கு சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்த சுனிலின் உறவினர்களிடம் தெரிவித்ததின்பேரில், தனிப்படையினருக்கு இத்தகவல் கிடைத்தது.