மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் பாஜக – அதிமுகவுக்கு உரியநேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம். கொரோனா பேரிடர் நேரத்தில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தனியார் துறையில் சுமார் 70 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. உற்பத்தி, கட்டுமானம், ஓட்டல் தொழில், வர்த்தகம் என அனைத்துத் துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி ( ஜிடிபி) உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 23.9% சுருங்கியுள்ளது. இதில் விதிவிலக்காக இருப்பது வேளாண்துறை மட்டும்தான். அதில் மட்டும்தான் சுமார் 4% வளர்ச்சி காணப்படுகிறது. அதுவும் இல்லாவிட்டால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும். இப்போது அந்த வேளாண்துறையையும் அழித்தொழிப்பதற்கு மோடி அரசு சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டங்களின் காரணமாக விவசாயத்துறையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காடாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கள்ளச் சந்தை பெருகும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். விவசாய உற்பத்தி,வர்த்தகம் மற்றும் வணிகம் ( மேம்பாடு மற்றும் வசதி செய்தல்) சட்டம்-2020; விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்) விலைஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் – 2020; மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தச்) சட்டம் -2020 ஆகியவை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. மோடி அரசு இந்த சட்டங்களை அவசர சட்டங்களாகப் பிறப்பித்திருந்தது. அவற்றை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பஞ்சாப் மாநிலத்தில் அது தீவிரமடைந்துள்ளது. இதனால் அகாலிதளம் கட்சி இப்போது பாஜக கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இந்த விவசாய விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. ஆனால், இந்த சட்டங்கள் நிறைவேற அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது விவசாய சமூகத்திற்கு ஆளுங்கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் இழைத்துள்ள மாபெரும் துரோகமாகும். விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மோடி அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத்துழைக்கும் அதிமுக தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.