தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியை தேர்வுக்குழு தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துணை இயக்குநர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர்களை உறுப்பினர்களாகவும் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகிய சமூகங்களின் மேம்பாட்டிற்காக உள்ள இந்தத் துறையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தற்போது காலியாக உள்ள சமையலர் பணியை நிரப்பப் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்களை மட்டுமே கொண்டு தேர்வுக் குழு அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட தேர்வுக்குழு அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுக்குழு பிற்படுத்தப்பட்ட சமூக நல அயலவர்கள் தவிர மற்ற சமூக நல அலுவலர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. அதேபோல் மொத்த காலிப் பணியிடங்களான 954ல் மாவட்ட வாரிய காலிப் பணியிடங்கள் எத்தனை என்பதையும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப்பணியிடங்களை நியாயமான முறையில் நிரப்ப மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்களின் பங்களிப்பு மிக அவசியமானது எனக் கருதி அவர்களையும் இக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனவும் இந்த நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.