இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: ”கடந்த 2019-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 918 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டில் 29 ஆயிரத்து 17 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019-ல் கொலைக் குற்றங்கள் எண்ணிக்கை 0.3 சதவீதம் குறைந்துள்ளது. தகராறு காரணமாக 9,516 கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து தனிப்பட்ட பகை, பழிக்குப் பழிவாங்குதல் போன்றவை மூலம் 3,833 கொலைகள் நடந்துள்ளன. ஆதாயத்தின் மூலம் கொலை செய்தலில் 2,573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019-ல் கடத்தல் வழக்குகள், கடந்த 2018-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2019-ல் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 37 கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2018-ல் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 734 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த ஆட்கடத்தல் வழக்கில் 23,104 பேர் ஆண்கள், 84,921 பேர் பெண்கள். ஒட்டு மொத்தமாக 71,264 பேர் குழந்தைகள் கடத்தப்பட்டனர். இதில் 15,894 பேர் ஆண் குழந்தைகள். 55,370 பேர் பெண் குழந்தைகள். வயதுவந்தோர் 36,761 பேர் கடத்தப்பட்டனர். இதில் 7,210 பேர் ஆண்கள், 29,551 பேர் பெண்கள். 2019-ம் ஆண்டில் கடத்தப்பட்டவர்களில் 96 ஆயிரத்து 295 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் 22,794 பேர் ஆண்கள், 73,501 பேர் பெண்கள். இதில் 95,551 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடந்த 2018-ல் 2,278 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2019-ல் 2,260 வழக்குகள் பதிவாகின. இது 0.8 சதவீதம் குறைவாகும். இதில் 6,616 பேர் கடத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவானது. இதில் 2,914 குழந்தைகள், 3,702 பேர் வயது வந்தோர். இதில் கடத்தல்காரர்களிடம் இருந்த 6,571 பேர் மீட்கப்பட்டனர்”.
இவ்வாறு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.