ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல். உச்சநீதிமன்றமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றுதான் குறிப்பிட்டது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும். நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்.