எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது: அன்பு, கனவு, கேள்வி, மீட்சி கொண்டு இச்சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். என் சக தலைமுறையோடும் என்னிலும் இளையவர்களோடும் நான் பகிர்ந்துகொள்ள நினைத்த செய்திகளையும் உணர்வுகளையும் சிறுகதை அம்புகளாக வடித்திருக்கிறேன். தொற்று நோய், மன அழுத்தம், பொருளாதார வீழ்ச்சி என கடும் சவால்கள் நிறைந்த இச்சூழலில் இந்த புத்தகத்தில் இருக்கும் மனிதர்கள் நம் சமூகத்திற்கு சிறுதுளியேனும் உற்சாகமும் தோழமையும் தருவார்கள் என நம்புகிறேன்.
நூல் குறித்து பதிப்பாளர் மு.வேடியப்பன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,கபிலன்வைரமுத்து புதிய எழுதுகளங்களுக்கானத் தேடல் கொண்ட பன்முகப் படைப்பாளர். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், திரைக்கதை, வசனம், பாடல்கள் என மொழியின் அனைத்து வடிவங்களிலும் இயங்குபவர். அம்பறாத்தூணி கபிலன் வைரமுத்துவின் பதினோராவது புத்தகம். இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பதினைந்து கதைகளும் பதினைந்து அனுபவங்கள். வேலூர் சிப்பாய் புரட்சி, பூலித்தேவன் ராணுவ முகாம், நவீனகாலத்து ஆழ்கடல் சுரங்கம், டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்று பல்வேறு நிகழ்வுகளை கதைகள் வழி பேசியிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என்று வெவ்வேறு காலகட்டங்களில் இந்த கதைகள் நிகழ்கின்றன. இது பழமையை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் புதுமை இலக்கியம். கபிலன் வைரமுத்துவோடு டிஸ்கவரி புக் பேலஸ் இணைவதில் பெருமை கொள்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கவண் படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான கபிலன் வைரமுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியாகவும் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படத்தில் கபிலன் வைரமுத்து எழுதிய ஒளியும் ஒலியும் பாடல் எளிமையான மொழியில் பல்வேறு கால மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை மையமாக வைத்து 2018-ஆம் ஆண்டு கபிலன்வைரமுத்து ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ என்ற தனிப்பாடலை தன்னுடைய தயாரிப்பில் உருவாக்கியிருக்கிறார். இதை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கல்லூரி நாட்களில் தன் நண்பர்களோடு சேர்ந்து மேற்கொண்ட சமூகப்பணிகளை ஒரு அனுபவ ஆவணமாகத் தொகுத்து ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற பெயரில் யூ-டியூபில் வெளியிட்டிருக்கிறார். கபிலன்வைரமுத்து தற்போது இந்தியன்2, தள்ளிப்போகாதே, ஆலம்பனா, சின்ட்ரெல்லா, நாநா உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.