உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று மீண்டும் செல்கின்றனர். கடந்த வியாழக்கிழமை ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீஸார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். அதன்பின் போலீஸார் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களைக் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸார் 200 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கவுதம் புத்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் ஹத்ராஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பிற்பகலில் செல்ல இருக்கின்றனர். பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரமுகர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறியும், நியாயம் கிடைக்கவும் போராட உள்ளனர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று ஹத்ராஸ் நகரம் செல்கின்றனர். பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 19 வயது இளம்பெண்னின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில், “உ.பி. அரசும், போலீஸாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடமும், பெண்ணிடமும் நடந்துகொண்ட முறையை என்னால் ஏற்க முடியாது. எந்த இந்தியராலும் ஏற்க முடியாது. ஹத்ராஸுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் வேதனையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் அவர்களைச் சந்திக்கும் என் முயற்சியில் என்னை உலகின் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உத்தரப் பிரதேச அரசு ஒழுக்கம் சார்ந்த, அறம் சார்ந்த விஷயங்களில் களங்கப்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை, அந்தப் பெண்ணின் புகார் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெண் இறந்தபின் உடல் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர், அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்போது மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆளாக்கப்பட உள்ளனர். இதுபோன்ற நடத்தையை தேசத்தில் யாரும் ஏற்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டுவதை நிறுத்துங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்