கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. அடுத்த 48 மணிநேரம் கொரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப் இருவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டனர். ஆனால் அதிபர் ட்ரம்ப்புக்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே வால்டர்ரீடில் உள்ள ராணுவ மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராணுவ மருத்துவ மையத்துக்குச் சென்றபின் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் அதிபர் ட்ரம்ப் பேசியதில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கிறது எனத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால், இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்ட தேதி, நேரம் ஏதுமில்லை.
அதுமட்டுமல்லாமல் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்குச் செல்லும் முன் வெள்ளிக் கிழமை அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டுள்ளார். மூச்சுத்திணறல் லேசாக ஏற்பட்டதால் அதிபர் ட்ரம்ப் ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு, லேசான அறிகுறிகள் என்று கூறிவிட்டு அதன்பின்புதான் ராணுவ மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதிபர் ட்ரம்ப்புக்கு சிகிச்சையளிக்கும் வால்டர்ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் அதிபர் ட்ரம்ப் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் பல மருத்துவர்கள், கடற்படை கமாண்டர் மருத்துவர் சீன் கான்லே அளித்த பதிலைவிட அதிகமான கேள்விகள் ட்ரம்ப் உடல்நிலை குறித்து எழுகிறது
அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்து நன்கு அறிந்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ராணுவ மருத்துவமனைக்குச் செல்லும் முன் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப்புக்கு காய்ச்சல் இல்லை என்று மருத்துவர் கான்லே சொல்வதில் உண்மையில்லை. அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கும் கான்லே ஏன் பதில் அளிக்கவில்லை. அதிபர் ட்ரம்ப்புக்கு தற்போது 74 வயதாகிறது. அவரின் வயதுக்கு ஏற்ப உடல் எடையும் இல்லை. சற்று உடல் பருமன் உடையவர் என்பதால், கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆதலால் அடுத்த 48 மணிநேரம் என்பது அதிபர் ட்ரம்ப்புக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஆனால், அமெரிக்க அரசு நிர்வாகம் அதிபரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிக்கைக்குள் வைரஸ் பரவியநிலையில் கூட வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிபர் ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து அவரின் உதவியாளர்கள்கூட உண்மையான தகவல்களைத் தெரிவி்க்க மறுத்து விட்டார்கள். அவருக்கு என்ன பரிசோதனை செய்யப்பட்டது, முடிவுகள் என்ன என்பதையும் தெரிவி்க்கவில்லை. ஆனால், வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிடும் முன், அதிபர் ட்ரம்ப்பின் உதவியாளர் வெளியிட்ட வார்த்தை ஊடகத்தில் கசிந்துதான் ட்ரம்ப் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.
ராணுவ மருத்துவமனையின் மருத்துவர் கான்லே கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப்புக்கு ரெம்டெசிவிர், ஆன்ட்டி வைரஸ் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இன்னும் சில நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்துதான் அரசுப்பணிகளை ட்ரம்ப் கவனிப்பார். சனிக்கிழமைவரை அதிபர் ட்ரம்ப் உடல்நிலையில் ஆக்ஸிஜன் நிலை 96 சதவீதம் இருக்கிறது. மருந்துகள் அனைத்தும் நரம்புகள் மூலமே செலுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மிடோஸ் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப் உடல்நிலை வெள்ளிக்கிழமை கவலைக்கிடமாக மாறியதால்தான் ராணுவமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த 48 மணிநேரம் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடப்போகிறார் என்பது முக்கியமானது” எனத் தெரிவித்தார்.