தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி

உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனிக்காமல் மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதி சடங்கை கூட செய்ய வாய்ப்பளிக்காமல் இரவோடு இரவாக இரண்டரை மணியளவில் காவல்துறையினரே மயானத்திற்கு எடுத்து சென்று தன்னிச்சையாக எரித்ததை விட ஒரு கொடுமையான நிகழ்வு எதுவும் இருக்க முடியாது. இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற தலைவர் திரு ராகுல்காந்தி மற்றும் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. காவல்துறையினர் வழியிலேயே இடைமறித்து, காட்டுமிரண்டித்தனமாக அவர்களை கையாண்டதோடு மட்டுமல்லாமல், தலைவர் ராகுல் காந்தி அவர்களை தாக்கி, அவரை கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட உ.பி. காவல்துறையினரின் செயல்பாடு ஜனநாயக விரோதமும், சட்ட விரோதமும், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட அப்பெண்ணிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டியும், தலைவர் ராகுல்காந்தி அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டிக்கும் வகையிலும் அண்ணல் மகாத்மா காந்தி அவர்கள் போதித்த சத்தியாகிரக அறவழியில் அமர்ந்து போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இந்த சத்தியாகிரக அறவழி அமர்வு வருகிற அக்டோபர் 5 அல்லது 6 ஆம் தேதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்டம் மற்றும் நகராட்சிகளில் அமைந்துள்ள காந்தி சிலை, அம்பேத்கர் சிலை அல்லது முக்கிய மையப்பகுதிகளில் சத்தியாகிரக அறவழியில் அமர்ந்து நம்முடைய எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிய காட்சிகள் நாட்டுமக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பிரியங்கா காந்தியை பெண்ணின் தாயார் கட்டி தழுவி கதறி அழுதார். “எங்களுக்கு எங்கே நீதிகிடைக்க போகிறது, என் மகளை பலாத்காரத்திற்கு பலியாக்கிவிட்டேன்” என்று கூறியபோது “உங்கள் மகளுக்கு நீதி கிடைக்க கடைசிவரை போராடுவோம்” என்று ராகுலும், பிரியங்காவும் கூறியது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்திற்கு பாஜக அரசு விதித்த பல தடைகளை தகர்த்து ராகுலும், பிரியங்காவும் பயணம் செய்த காட்சிகள் ஜனதா ஆட்சியில் 1977 ஆம் ஆண்டில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் 11 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து அன்று இந்திரா காந்தி யானை மீது அமர்ந்து பயணம் செய்தது நினைவுபடுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போது பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களுக்காக குரல்கொடுக்க, ஆறுதல் கூற வருகிற பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்பதை ராகுலும், பிரியங்காவும் நிரூபித்திருக்கிறார்கள். எனவே, பாலியல் பலாத்காரத்திற்கு பலியான அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கிற போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டுமக்களுக்கு உணர்த்துவோம், பாதிக்கப்பட்டு தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.