உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மலையாளப் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் 4 பேர் மீதும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தேசத்துரோகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹாத்ரஸ் மாவட்டத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்த கிராமத்துக்குச் செல்ல போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் திங்களன்று சோதனைச் சாவடியில் போலீஸார் சோதனையிட்டபோது, ஒரு காரில் 4 இளைஞர்கள் ஹாத்ரஸ் செல்லப்போவதாகத் தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அதில் ஒருவர் பெயர் சித்திக் கப்பன் என்பதும், அவர் டெல்லியில் மலையாளப் பத்திரிகையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. சித்திக் கப்பன் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்ற 3 பேரும் முசாபர் நகரைச் சேர்ந்த அதி உர் ரஹ்மான், பாஹாரியாச்சைச் சேர்ந்த மசூத் அகமது, ராம்பூரைச் சேர்ந்த ஆலம் என விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் விசாரணை நடத்தி காரை போலீஸார் சோதனையிட்டபோது, காரில் ஜஸ்டிஸ்ஃபார் ஹாத்ரஸ் என்று எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் 4 பேருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர். மந்த் போலீஸ் நிலையத்தில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட் 4 பேர் மீதும், ஐபிசி 124ஏ (தேசத்துரோகச் சட்டம்), 153ஏ, 295ஏ, யுஏபிஏ பிரிவு 14, 17, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 65,72,76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில், “ஹாத்ரஸ் சம்பவத்தில் பல்வேறு வதந்திகளைப் பரப்பி நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் சாதிக் கலவரத்தையும் தூண்டிவிட்டு, நீதி கேட்க முனைந்துள்ளனர். ஒரு இணையதளத்தையும் உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டியுள்ளனர். இதில் யாரெல்லாம் நிதி திரட்டியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.